Published : 23 Sep 2021 03:11 AM
Last Updated : 23 Sep 2021 03:11 AM

மகாத்மாவை வேண்டாம் என்றால் இந்தியா மட்டுமல்ல உலகத்துக்கே எதிர்காலம் இருக்காது: பாரதிய வித்யாபவன் தலைவர் பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயர் கருத்து

திருப்பூர்

மகாத்மாவை வேண்டாம் என்றால், இந்தியா மட்டுமல்ல, உலகத்துக்கே எதிர்காலம் இருக்காது என கோவை பாரதிய வித்யாபவன் தலைவர் பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயர் பேசினார்.

சுதந்திர போராட்டத்தில் அகிம்சை வழியில் அறத்துடன் கலந்து களத்தில் நின்ற காந்தியடிகள், மதுரையில் 100 ஆண்டுகளுக்கு முன்பு செப்.22-ம் தேதி வேட்டியை மட்டுமே இனி தான் உடுத்துவதாக பிரகடனம் செய்தார். காந்தியடிகள் வேட்டி அணிந்த நூற்றாண்டு தினத்தை ராம்ராஜ் காட்டன் நிறுவனம், ‘காந்திய வேட்டி நூற்றாண்டு விழா’ என்ற பெயரில் திருப்பூரில் நேற்று விழாவாகக் கொண்டாடியது. இதில் ராம்ராஜ் காட்டன் குழுமத்தின் நிறுவனர் தலைவர் கே.ஆர்.நாகராஜன் வரவேற்றுப் பேசும்போது, ‘‘என் வாழ்க்கைப் போக்கில் நான் செய்த அனைத்து மாற்றங்களும் முக்கியமான நிகழ்வுகளால் ஏற்பட்டன. இம்முடிவுகள் ஆழ்ந்த ஆலோசனைக்குப் பிறகு எடுக்கப்பட்டவை. அதனால் நான் வருத்தப்பட வேண்டியதில்லை. என்னால் அவர்களுக்கு செய்ய முடிந்த ஒரே உதவி நான் எடுத்த முடிவுதான்" என காந்தியடிகளின் வார்த்தைகளை வேதமாகக் கொண்டு 1983-ம் ஆண்டு நான் வேட்டி வியாபாரத்தை தொடங்கினேன். நெசவாளர்களின் வாழ்க்கையை மனதில் கொண்டு, கடந்த 40 ஆண்டு காலமாக நெசவாளர்களை ஊக்குவித்து அவர்களது வாழ்வாதாரத்துக்கு வழிவகுத்து வேட்டியை இன்றைய தலைமுறை இளைஞர்களுக்கு ஏற்றவாறு வடிவமைத்து, வேட்டியை இந்தியாவின் அடையாளமாக்கிய பெருமையையும், வெற்றியையும் காந்தியடிகளின் பாதங்களில் அர்ப்பணிக்கிறோம்’’ என்றார்.

கோவை பாரதிய வித்யாபவன் தலைவர் பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசும்போது, ‘‘இன்று தேசம் மறந்து போன ஒரு மனிதர் என்றால் அது மகாத்மா காந்தியடிகள் தான். நாம் வேண்டாம் என்று விட்டு விட்டோம். உலகம் அவரை கொண்டாடி மகிழ்கிறது. வழக்கறிஞராக வந்த காந்தியடிகளை மகாத்மாவாக நாங்கள் மாற்றி அனுப்பினோம். ஆகவே இழப்பு எங்களுக்குத் தான் என்றார் நெல்சன் மண்டேலா. இந்நூற்றாண்டின் இணையற்ற மனிதராக அறிவிக்கப்பட்ட அவரை நாம் மறந்து விட்டோமே. அமெரிக்காவில் கருப்பின மக்களுக்கு விடுதலை வாங்கிக் கொடுத்தவர் மார்ட்டின் லூதர் கிங். அவரது அலுவலகத்தில் காந்தியடிகளின் புகைப்படத்தை வைத்திருந்தார். 27 ஆண்டுகள் தனிமை சிறையில் இருந்த நெல்சன் மண்டேலா, வெளியில் வந்த பிறகு, சிறையில் இருந்த அத்தனை நாட்களும் மகாத்மாவின் சத்திய சோதனையைத் தான் படித்தேன் என்றார். அத்தகைய மகாத்மாவை நாம் தற்போது வேண்டாம் என்று விட்டோம்.

அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா உள்ளிட்ட இன்றைய உலகப் பெரும் தலைவர்கள் போற்றும், ஐன்ஸ்டீன் உள்ளிட்ட விஞ்ஞானிகள் போற்றிய மகாத்மா காந்தியை நாம் மறந்து விட்டோம். பாராட்டுக்கு உரியவர்களை உரிய நேரத்தில் அங்கீகாரம் செய்யாவிட்டால், அந்த தேசம் வளர்ச்சி பெறாது. இத்தருணத்தில் காந்தியடிகள் தற்போது தேவையா என்றால் நிச்சயமாக தேவை. மகாத்மாவை வேண்டாம் என்றால், இந்தியா மட்டுமில்லை, உலகத்துக்கே எதிர்காலம் இருக்காது. காலம் மீண்டும் கனிந்து வருகிறது. காந்தியம் மீண்டும் தலை தூக்கும்’’ என்றார்.

ஆனைமலை காந்தி ஆசிரம அறங்காவலர் ம.ரங்கநாதன் வாழ்த்திப் பேசும்போது, ‘‘அக்.2-ம் தேதி காந்தி ஜெயந்தி வருகிறது. அந்த தினத்தை அரசு விடுமுறை தினமாக அறிவிக்கக் கூடாது. தேசத் தந்தையான காந்தியடிகளின் பிறந்த நாளை விடுமுறை நாளாக கொண்டாடாமல், நடப்பாண்டு முதல் பள்ளிகளில் தேசியக்கொடி ஏற்றி காந்தியடிகளை போற்றும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை வலியுறுத்தி தமிழக முதல்வருக்கு கடிதம் அனுப்பவுள்ளோம்,’’என்றார்.

மேலும், ரூட்ஸ் குழும நிறுவனர் கே.ராமசாமி, வனம் இந்தியா பவுண்டேசன் செயலாளர் ஸ்கை வி.சுந்தர்ராஜன் ஆகியோரும் வாழ்த்திப் பேசினர். நிகழ்வில், 'மகாத்மாவைக் கொண்டாடுவோம்' என்ற பெயரிலான புத்தகம் வெளியிடப்பட்டது. ரூட்ஸ் குழும நிறுவனர் கே.ராமசாமி வெளியிட பாரதிய வித்யா பவன் தலைவர் பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயர் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து காந்தியடிகள் பெயரில் குறும்படம் வெளியிடப்பட்டது. முன்னதாக, சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்பத்தினர், நெசவாளர் குடும்பத்தினர் கவுரவிக்கப்பட்டனர். அவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் காசோலை, நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. அதோடு ஆனைமலை காந்தி ஆசிரம அறங்காவலர் ம.ரங்கநாதனிடம் ரூ.1 லட்சத்துக்கான காசோலை நன்கொடையாக வழங்கப்பட்டது. காந்தியடிகள் வாழ்வை நினைவு கூறும் வகையில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.


Sign up to receive our newsletter in your inbox every day!

 
x