

திருவள்ளூர் மாவட்டம், ஆவடியில் சமூக நலன், மகளிர் உரிமைத் துறை,ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பில் நேற்று சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர், அங்கன்வாடி பணியாளர்களால் அமைக்கப்பட்டிருந்த பாரம்பரிய உணவு திருவிழாவை திறந்து வைத்து, ஊட்டச்சத்து உணவுகளை சாப்பிட்டார்.
தொடர்ந்து, அமைச்சர் தலைமையில் கர்ப்பிணிகள், அங்கன்வாடி பணியாளர்கள், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணியாளர்கள் ஊட்டச்சத்து உறுதிமொழி ஏற்றனர்.
பிறகு, விழாவில் பங்கேற்ற 100 கர்ப்பிணிகளுக்கு தமிழக அரசின் சார்பில் அமைச்சர் சா.மு.நாசர் சீர்வரிசைகளை வழங்கிவாழ்த்தினார். பின்னர், கர்ப்பிணிகளுக்காக இவ்விழாவின் போது நடைபெற்ற கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை அமைச்சர் பார்வையிட்டார். தொடர்ந்து, பிரத்யேகமாக தயார் செய்யப்பட்ட 5 வகையான உணவு வகைகளை கர்ப்பிணிகள் உண்டு மகிழ்ந்தனர்.
விழாவில், அமைச்சர் நாசர் கூறியதாவது:
கர்ப்பிணிகள் ஊட்டச்சத்தான உணவுகளை உட்கொள்வதால், அவர்கள் மட்டுமல்லாமல், கருவில்இருக்கும் குழந்தையும் ஆரோக்கியமாக இருக்கும். பிறக்கும் குழந்தைகள் ஒட்டுமொத்த உடற்கூறுகளும் வலிமை பெற்று அறிவுத் திறனில்சிறந்து விளங்க வேண்டுமாயின், ஊட்டச்சத்தான உணவுகளை கர்ப்பிணிகள் உட்கொள்ள வேண்டும்.அதற்காகத்தான் ஒருங்கிணைந்தகுழந்தைகள் வளர்ச்சித் திட்டம் மூலம் ஊட்டச்சத்து உணவுகள் வழங்கப்படுகின்றன.
குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் நோய் எதிர்ப்புசக்தி அதிகரிக்கும். வருங்காலத்தில் குழந்தைகள் பல துறைகளில் வல்லுநர்களாக விளங்க ஊட்டச்சத்து உணவு அடித்தளமாக அமையும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இவ்விழாவில், மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் ராஜராஜேஸ்வரி, பூந்தமல்லி குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ராஜேஸ்வரி, வட்டார மருத்துவ அலுவலர் பிரதீபா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.