

ஃபோர்டு நிறுவனம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், நிறுவன ஊழியர்கள், உதிரிபாகம் விநியோக நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அரசு நடவடிக்கை எடுக்கும் என்று ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார்.
அமெரிக்காவைச் சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு, இந்தியாவில் உற்பத்தியை நிறுத்தப்போவதாகவும், அடுத்தாண்டு சென்னையில் உள்ள தயாரிப்பு தொழிற்சாலையை மூட உள்ளதாகவும் அறிவித்துள்ளது. இது தொடர்பாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சமீபத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில், நேற்று ஊரகதொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் கிண்டியில் உள்ள சிட்கோ அலுவலகத்தில் ஃபோர்டு நிறுவனத்துக்கு உதிரிபாகங்களை நேரடியாக விநியோகிக்கும் தொழி்ல் நிறுவனங்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்ட முடிவில் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது:
செங்கல்பட்டில் இயங்கி வரும் ஃபோர்டு நிறுவனம் நஷ்டம் ஏற்பட்டதால் ஆலையை மூட உள்ளதாக அறிவித்துள்ளது. இந்நிலையில், அந்த நிறுவனத்துக்கு உதிரிபாகங்களை உற்பத்தி செய்யும் 50-க்கும்மேற்பட்ட தொழில் நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. நிறுவனங்கள் சார்பில் அரசு மூலம் சில சலுகைகளை கேட்டுள்ளனர். இதை முதல்வரிடம் தெரிவித்து என்ன நடவடிக்கை எடுக்க முடியுமோ எடுப்போம்.
சென்னையை சுற்றியுள்ள 74 நிறுவனங்கள் ஃபோர்டுக்கு உதிரிபாகங்களை விநியோகித்து வருகின்றன. சில நிறுவனங்கள் முழுவதுமாகவும், 90 சதவீத நிறுவனங்கள் 30-40 சதவீதமும் உதிரிபாகங்களை வழங்கி வருகின்றன. தற்போது ஃபோர்டு நிறுவனம் மூடப்படவில்லை. அடுத்த ஆண்டு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதால், அதற்கு முன் வேலை செய்பவர்கள் யாரும் வேலை இழப்புக்கு ஆளாகாத வண்ணம் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், ஃபோர்டு நிறுவன கட்டமைப்பை வேறு ஒரு நிறுவனம் எடுத்து நடத்துவது குறித்து தொழில் துறை ஆலோசனை நடத்தி வருகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.