

மின்வெட்டுக்கு தமிழக அரசு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பன உள்பட 11 தீர்மானங்கள் தேமுதிக ஆலோசனைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
அதில், தமிழகத்தில் மின்வெட்டே இருக்காது என தமிழக முதலமைச்சர் அறிவித்தாலும், ஆங்காங்கே மின்வெட்டு இருந்து வருகிறது. தமிழகத்திற்கு கிடைக்கும் மின்சாரம் குறித்த புள்ளி விவரத்தை பார்க்கும்போது, தற்காலிக தீர்வாகத்தான் தெரிகிறதே தவிர, நிரந்தரமாக மின்வெட்டு பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் புதிய மின் உற்பத்தி திட்டங்கள் துவக்கப்பட்டோ, நடைமுறையில் செயல்படுத்தப்படவோ இல்லை. எனவே, மின்வெட்டிற்கு நிரந்தர தீர்வு காண தமிழக அரசு முன்வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர ஆலோசனைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
1.தேசிய ஜனநாயகக் கூட்டணியை தமிழகத்தின் மாற்று அரசியல் சக்தியாக உருவாக்கிய தமிழக வாக்காள பெருமக்களுக்கு நன்றி.
2.நரேந்திரமோடிக்கும், அவருடன் சக அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ள அனைத்து அமைச்சர் பெருமக்களுக்கும் வாழ்த்துகள்.
3.இலங்கைத் தமிழர் பிரச்சினை, தமிழக மீனவர் பிரச்சினை உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வு காண புதியதாக பொறுப்பேற்றுள்ள மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
4.தமிழகத்தில் மட்டும் எவ்வித தேவையும் இன்றி வாக்குப் பதிவுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு 144 தடை உத்தரவை பிறப்பித்ததன் மூலம், ஆளும் கட்சியினர் அராஜகத்திலும், முறைகேட்டிலும் ஈடுபட்டு, பணநாயகத்தை வெற்றி பெற வைத்தனர். இதற்கு தேர்தல் ஆணையமும், காவல்துறையும் கண்டும், காணாமல் இருந்து, ஆளும் கட்சிக்கு துணை நின்றது. தமிழக தேர்தல் அதிகாரி வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டதை தடுக்க இயலாததற்கு கடும் கண்டனம்.
5.10ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தேமுதிக வெள்ளி விழா, பொன் விழா, வைர விழா காணும் வகையில் தமிழக மக்களுக்காக தேமுதிக என்றும் பாடுபடும்.
6.தமிழகத்திலுள்ள நீர் ஆதாரங்களான ஆறுகள், குளம், குட்டை, ஏரி, கால்வாய் ஆகியவற்றை ஒருங்கிணைத்து, அதன் மூலம் வறட்சி என்ற சொல்லே தமிழகத்தில் இல்லாத நிலையை உருவாக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
7.வறுமையில் உள்ளவர்களுக்கு உரிய வேலை வாய்ப்பை உருவாக்கிட அல்லது சுயதொழில் செய்திட தேவையான உதவிகளை வழங்கிட தமிழக அரசு சிறப்பு திட்டத்தை செயல்படுத்தி, தமிழகத்தில் வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிக்க முன் வர வேண்டும்.
8.தமிழக மீனவர்கள் எவ்வித அச்சுறுத்தலும் இன்றி மீன்பிடித் தொழில் செய்ய ஆவன செய்ய வேண்டும்.
9.கடற்கரை மணல் என்று சொல்லக் கூடிய தாது மணல் கொள்ளையை மத்திய அரசு தடுத்து நிறுத்திட வேண்டும்,
10.தமிழகத்தில் உள்ள நீர் ஆதாரங்களை சீர்படுத்தி, நிலத்தடி நீர் உயர தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும், போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.