செம்பரம்பாக்கம் ஏரியில் தொழிற்சாலை திரவக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதா?- மண் படிவுகளை ஆய்வு செய்ய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு

செம்பரம்பாக்கம் ஏரியில் தொழிற்சாலை திரவக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதா?- மண் படிவுகளை ஆய்வு செய்ய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு
Updated on
1 min read

செம்பரம்பாக்கம் ஏரியில் தொழிற்சாலை திரவக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதா என்பதைக் கண்டறியும் வகையில், அங்குள்ள மண் படிவுகளை ஆய்வு செய்யுமாறு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மாநகரின் முக்கிய நீராதாரமான செம்பரம்பாக்கம் ஏரியில் குப்பை, தொழிற்சாலை திரவக் கழிவுகள் கொட்டப்படுவதாக நாளிதழ் ஒன்றில் கடந்த ஆண்டு செய்தி வெளியானது.அதனடிப்படையில், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வு தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது.

அந்த வழக்கை விசாரித்த அமர்வு, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய மூத்த அதிகாரி, பொதுப்பணித் துறை கண்காணிப்புப் பொறியாளர், தொழில்துறை மூத்த அதிகாரி ஆகியோர் கொண்ட கூட்டுக்குழுவை அமைத்து, சம்பந்தப்பட்ட பகுதியில் ஆய்வு மேற்கொண்டு, செம்பரம்பாக்கம் ஏரி மாசுபடுவதை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டிருந்தது.

பின்னர், ஏரியில் படிந்துள்ள மண்ணை சேகரித்து, அதில் தொழிற்சாலைக் கழிவுகள் உள்ளதா என்பதை ஆய்வு செய்து, அறிக்கை அளிக்குமாறும் அமர்வின் உறுப்பினர்கள் உத்தரவிட்டிருந்தனர்.

இந்நிலையில், இந்த மனு அமர்வின் நீதித்துறை உறுப்பினர் கே.ராமகிருஷ்ணன், தொழில்நுட்ப உறுப்பினர் கே.சத்யகோபால் ஆகியோர் முன்னிலையில் கடந்த 20-ம் தேதி விசாரணைக்கு வந்தது.

அப்போது அமர்வின் உறுப்பினர்கள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

இந்த வழக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பதிவு செய்யப்பட்டது. மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மட்டும் ஓர் அறிக்கையை தாக்கல் செய்திருந்தது. ஏரியில் மாசு ஏற்படுவதை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து கூட்டுக் குழுவினரோ, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளோ ஓர் அறிக்கைகூட தாக்கல் செய்யவில்லை. இவர்களுக்கு பலமுறை வாய்ப்புகள் வழங்கியும், எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்யவில்லை.

இந்த வழக்கின் அடுத்த விசாரணை நாளான அக்டோபர் 8-ம் தேதிக்குள் கூட்டுக் குழு உறுப்பினர்கள், ஏரியில் உள்ள மண் படிவுகளை ஆய்வு செய்து, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அவ்வாறு அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால், நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்.

இவ்வாறு உத்தரவில் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in