சென்னையில் விடிய விடிய கனமழை: சாலைகளில் பெருக்கெடுத்த மழைநீர்; டிஜிபி அலுவலகத்தில் 10 செ.மீ. பதிவு

சென்னையில் நேற்று முன்தினம் பெய்த கனமழையால், சிட்லபாக்கம் சாலையில் தண்ணீரில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள். இப்பகுதியில் மழைநீர் வடிகால்களை தூர்வார வேண்டுமென்பதே மக்களின் எதிர்பார்ப்பு.படம்: எம்.முத்துகணேஷ்
சென்னையில் நேற்று முன்தினம் பெய்த கனமழையால், சிட்லபாக்கம் சாலையில் தண்ணீரில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள். இப்பகுதியில் மழைநீர் வடிகால்களை தூர்வார வேண்டுமென்பதே மக்களின் எதிர்பார்ப்பு.படம்: எம்.முத்துகணேஷ்
Updated on
1 min read

சென்னையில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் விடிய விடிய கனமழை பெய்தது. டிஜிபி அலுவலகத்தில் 10 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

சென்னை மாநகரப் பகுதியில் நேற்று முன்தினம் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்நிலையில், நள்ளிரவு முதல் மாநகரின் அனைத்துப் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் மழை பெய்யத் தொடங்கியது. விடிய விடிய கனமழை பெய்தநிலையில், காலையிலும் சாரல் மழை நீடித்தது.

இதனால் மாநகரம் முழுவதும் குளிர்ச்சியான சூழல் நிலவியது. கனமழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இதேபோல, சுரங்கப் பாலங்களிலும் மழைநீர் தேங்கியது.

மழை நீரை அகற்றும் பணியில் மாநகராட்சிப் பணியாளர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் ஈடுபட்டனர். நேற்று காலையிலும் மழை பெய்ததால், பல பள்ளி நிர்வாகங்கள், இணையவழியில் பாடங்களை நடத்தின.

கனமழை காரணமாக நுங்கம்பாக்கம் ஹாடோஸ் சாலையில் விழுந்த மரத்தை, மாநகராட்சிப் பணியாளர்கள், தீயணைப்பு வீரர்கள், போலீஸார் ஆகியோர் வெட்டி அகற்றினர்.

நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி, அதிகபட்சமாக சென்னை டிஜிபி அலுவலகத்தில் 9 செ.மீ., தரமணி, எம்ஆர்.சி. நகரில் தலா 9 செ.மீ., அயனாவரம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஆகிய இடங்களில் தலா 7 செ.மீ., அண்ணா பல்கலைக்கழகம், எம்ஜிஆர் நகர், பெரம்பூர், மேற்கு தாம்பரம், வில்லிவாக்கம் ஆகிய இடங்களில் தலா 5 செ.மீ., சோழிங்கநல்லூர், சென்னை நுங்கம்பாக்கம், தண்டையார்பேட்டை, சென்னை விமானநிலையம் ஆகிய இடங்களில் தலா 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in