

குறிப்பிட்ட தேதி, நேரத்தில் குழந்தை பெற்றுக் கொள்வதை கைவிட வேண்டும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
தமிழ்நாடு தேசிய ஊட்டச்சத்து மாத விழாவை முன்னிட்டு, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் துறை சார்பில் சமுதாய வளைகாப்பு விழா சென்னை சைதாப்பேட்டையில் நேற்று நடைபெற்றது.
அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், கீதாஜீவன், தென்சென்னை எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் 100 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நடத்திவைத்து, சீர்வரிசைப் பொருட்களை வழங்கினர். விழாவில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் துறை இயக்குநர் கே.அமுதவல்லி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது: சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட அனைத்து அறிவுப்புகளையும் செயல்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மகளிர் மேம்பாட்டுத் திட்டங்களில் முதல்வர் முழு கவனம் செலுத்தி வருகிறார்.
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் தாய்ப்பால் வங்கி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. சென்னை அரசு பொது மருத்துவமனை மற்றும் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் பாலூட்டும் அறை அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல, அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் பாலூட்டும் அறைகளை அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட தேதி, நேரத்தில் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டுமென பெண்கள் கருதுகின்றனர். இது தவறானது. இந்த முடிவை பெண்கள் கைவிட வேண்டும்.
சிசேரியன் மூலம் 10, 15 நாட்களுக்கு முன்பாகவே குழந்தை பெற்றுக் கொள்ளும்போது, குழந்தையின் வளர்ச்சியில் சிறு குறைபாடு ஏற்படும். எனவே, குழந்தையை முழுமையாக வளரவிட்டு, சுகப் பிரசவத்தில் பெற்றுக் கொள்ள வேண்டும். அப்போதுதான், அந்தக் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும்.
பரிசோதனைக்கு வரும் கர்ப்பிணிகளுக்கு இதுகுறித்து ஆலோசனை வழங்குமாறு, சுகாதார அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.