

சென்னையில் கொள்ளையடித்த பணத்தில் மனைவிகளுக்கு பொருட்கள் வாங்கிக் கொடுத்த பெங்களூரு கொள்ளையன் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் வாங்கிக் கொடுத்த பொருட்கள் அனைத்தையும் பறிமுதல் செய்த போலீஸார் அதை சரக்கு வாகனத்தில் சென்னை கொண்டு வந்தனர்.
சென்னை பூக்கடை பகுதியில் வசித்து வருபவர் ராஜேந்திரகுமார் ஜெயின். இவர் அதே பகுதியில் உள்ள கோவித்தப்ப நாயக்கன் தெருவில் கடந்த 25 ஆண்டுகளாக உணவு பொருட்களுக்கு பயன்படுத்தும் ரசாயனப் பொருட்களை மொத்தமாக விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் ராஜேந்திரகுமார் ஜெயின் கடைக்கு டிப்டாப் உடையணிந்து வந்த நபர் ஒருவர், ஊழியர் மனோஜ் என்பவரிடம், நான் உங்கள் முதலாளியின் நெருங்கிய நண்பர் என பேச்சுக் கொடுத்துள்ளார்.
தொடர்ந்து, உடல் அசதியாக உள்ளது ஒரு டீ வாங்கி வர வரமுடியுமா என கேட்டுள்ளார். முதலாளியின் நண்பர் என்று கூறியதை நம்பி மனோஜ் அருகில் உள்ள கடைக்கு டீ வாங்க சென்றார். அவர் வருவதற்குள் கல்லா பெட்டியில் இருந்த ரூ.5 லட்சம் மற்றும் 100 கிராம் எடை கொண்ட இரு தங்கக் கட்டிகளை கொள்ளையடித்து அங்கிருந்து டிப்டாப் ஆசாமி நழுவிச் சென்றார். இந்த தங்க கட்டி ராஜேந்திரகுமார் ஜெயின் தனது மகளின் திருமணத்துக்கு நகைகள் செய்ய வைத்திருந்ததாகும்.
கொள்ளை சம்பவம் குறித்து பூக்கடை காவல் நிலையத்திலும் புகார் ராஜேந்திர குமார் ஜெயின் புகார் அளித்தார். கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில், நூதன முறையில் பணம் மற்றும் தங்க கட்டிகளை திருடிச் சென்றது பெங்களூருவைச் சேர்ந்த பிரபல கொள்ளையன் முகமது சமீர் என்பதும், இவர் சென்னை, பெங்களூரு மற்றும் மும்பையில் இதுபோன்று கைவரிசை காட்டியிருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து மும்பையில் பதுங்கி இருந்த முகமது சமீரை தனிப்படை போலீஸார் கைது செய்தனர். விசாரணையில் அவருக்கு இரு மனைவிகள் என்பதும் முதல் மனைவி மும்பையிலும், மற்றொரு மனைவி பெங்களூருவிலும் வசிப்பதும் தெரியவந்தது. கொள்ளையடித்த பணத்தில் மனைவிகளுக்கு புதிய கார், வாசிங் மெசின், குளிர்சாதன பெட்டி உட்பட மேலும் பல வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கிக் கொடுத்திருப்பது தெரிய வந்தது.
அனைத்து பொருட்களையும் பறிமுதல் செய்த போலீஸார் அதை சரக்கு வாகனத்தில் ஏற்றி சென்னை கொண்டு வந்தனர். நீதிமன்றத்தின் மூலம் ராஜேந்திரகுமார் ஜெயினிடம் விரைவில் இந்த பொருட்கள் ஒப்படைக்கப்படும் என போலீஸார் தெரிவித்தனர்.