Published : 23 Sep 2021 03:12 AM
Last Updated : 23 Sep 2021 03:12 AM

தமிழக கோயில்களில் ‘கலைஞர்’ தல மரக்கன்று நடும் பணி: இந்து சமய அறநிலையத் துறை தகவல்

சென்னை

‘கலைஞர்’ தல மரக்கன்று நடும் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் பக்தர்கள் அதிக அளவில் வரும் பல்வேறு கோயில்களில் தல மரக்கன்றுகள் நடும் பணி விரைவாக நடைபெற்று வருகின்றன.

இதுகுறித்து அறநிலையத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சென்னை நுங்கம்பாக்கம் அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்தில் ‘கலைஞர்’ தல மரக்கன்றுகள் நடும் திட்டத்தை நாகலிங்க மரக்கன்றை நட்டு முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இத்திட்டப்படி, கோயில்களுக்கு சொந்தமான நிலங்களில் ஒரு லட்சம் தல மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தை மூன்று மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருநெல்வேலி, மயிலாடுதுறை, திருவண்ணாமலை, திருச்சி, சிவகங்கை, வேலூர் மாவட்டங்களில் உள்ள பல்வேறு கோயில்களில் அந்தந்த தல மரங்களான மா, இலுப்பை, கொய்யா, மகிழம் போன்ற மரங்கள் நட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள கடம்பர மரத்தை வணங்கினால் கல்வியில் சிறந்து விளங்கலாம். திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் உள்ள மூங்கில் மரத்தை வணங்கினால் இசைஞானம் வளரும். மயிலாடுதுறை மயூரநாதர் கோயிலில் உள்ள மரத்தை வணங்கினால் வெற்றி கிட்டும் என்பது நம்பிக்கை. இந்த தல மரங்களை, மதுரை மாவட்டம் பேரையூர் மேலப்பரங்கிரி சுப்பிரமணியர் கோயில், திண்டுக்கல் தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயில், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயில், விருதுநகர் இருக்கன்குடி மாரியம்மன் கோயில், சிவகங்கை மடப்புரம் அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்ரகாளியம்மன் கோயில், திருநெல்வேலி மாவட்டம் நெல்லையப்பர் கோயில், அம்பாசமுத்திரம் காசிநாத சுவாமி கோயில் உட்பட பல்வேறு கோயில்களில் தல மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x