

வட கிழக்குப் பருவமழையின்போது சாலைகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் மழைநீர் தேங்காமல் இருப்பதற்காக மழைநீர் வடிகால்களை தூர்வாரி மழைநீர் தங்கு தடையின்றி வடிய, மண்டல அளவில் சிறப்பு செயல் திட்டம் தயாரிக்கப்படுகிறது என்று பொதுப்பணித் துறை செயலாளர் சந்தீப் சக்சேனா தெரிவித்தார்.
இதுகுறித்து தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
வடகிழக்குப் பருவமழை அடுத்த மாதம் தொடங்கவுள்ளது. அதனால் ஆறுகள், அணைகள், ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகள் உறுதியாக இருப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மழைக்காலத்தில் மழைநீர் தேங்குவது போன்ற பிரச்சினைகளுக்கு சம்பந்தப்பட்ட துறைகளுடன் இணைந்து உடனுக்குடன் தீர்வு காணப்படும். நீர் நிலைகளின் கரைகளில் செயற்பொறியாளர்கள் நடந்து சென்று கரைகளில் உறுதித்தன்மையை ஆய்வு செய்ய வேண்டும். அணைகளின் மதகுகள் இயக்கம், அவற்றில் பழுது இருந்தால் அதை சரி செய்வதுடன் உரிய புகைப்படங்களுடன் அக்.10-ம் தேதிக்குள் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
வெள்ளநீர் வடிகால்களில் உள்ள இயற்கை தாவரங்கள், மிதக்கும் குப்பைகள், கட்டிடக் கழிவுகள் ஆகியவற்றை பருவமழைக்கு முன்னர் அகற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சாலைகள், குடியிருப்புப் பகுதிகளில் மழைநீர் தேங்காமல் இருப்பதற்காக மழைநீர் வடிகால்களை தூர்வாரி மழைநீர் தங்கு தடையின்றி வடிய மண்டல அளவில் சிறப்பு செயல் திட்டம் தயாரிக்கப்படுகிறது.
நீர்வளத் துறை, வருவாய்த் துறை, நெடுஞ்சாலைத் துறை, உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து முன்னேற்பாட்டு பணிகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
வெள்ளத் தடுப்புக்கு தேவையான மணல் மற்றும் தளவாடப் பொருட்கள், ஜேசிபி போன்ற இயந்திரங்கள் தேவையான அளவு தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்தல், வரத்து வாய்க்கால்கள், உபரி நீர் கால்வாய்கள் ஆகியவற்றில் தண்ணீர் தங்குதடையின்றி செல்லுதல், கடலோர மாவட்டங்களில் ஆற்று முகத்துவாரங்களில் அடைப்பு இல்லாமல் இருப்பது ஆகிய பணிகளை மேற்கொள்ள நீ்ர்வளத் துறை பொறியாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கனமழையின்போது 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியாளர் அமர்த்தப்பட்டு நீர்த்தேக்கங்கள் மற்றும் நீர் நிலைகளில் நீர் வரத்து, நீர் இருப்பைக் கண்காணித்து உடனுக்குடன் உயர் அலுவலர்களுக்கு தகவல் அனுப்பவும் பொறியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.