

ஒப்பந்தப்படி காய்கறிக் கழிவு களில் இருந்து மின் உற்பத்தி செய்யாமல் இருந்த ராம்கி என்விரோ இன்ஜினீயர்ஸ் நிறுவனத்திடம் ரூ.1 கோடி அபராதம் வசூலித்து கோயம்பேடு மார்க்கெட் நிர்வாகக் குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
சென்னை கோயம்பேட்டில் 295 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த மார்க்கெட்டில் மொத்தம் 3,194 கடைகள் உள்ளன. இப்பகுதியில் நாள் ஒன்றுக்கு 150 டன் காய்கறி கழிவுகள் குப்பையாக கிடைக்கின்றன. இதை அகற்ற கோயம்பேடு மார்க்கெட் நிர்வாகக் குழு அலுவலகம் சார்பில் ஒருங்கிணைந்த திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் டெண்டர் கோரப்பட்டது.
கடந்த 2010-ம் ஆண்டு ராம்கி என்விரோ இன்ஜினீயர்ஸ் என்ற நிறுவனத்துக்கு ஒரு டன் குப்பையை மார்க்கெட்டில் இருந்து அகற்ற ரூ.871.50 என கட்டணம் நிர்ணயித்து ஒப்பந்தம் வழங்கப்பட்டது. மேலும் காய்கறி கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரித்து தமிழ்நாடு மின் வாரியத்துக்கு விற்க வேண்டும் என்றும் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதன்படி, மார்க்கெட்டில் கிடைக்கும் காய்கறிக் கழிவுகளில் இருந்து தினமும் 2,500 யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்து, மின் வாரியத்துக்கு ராம்கி நிறுவனம் விற்று வந்தது. சில மாதங்கள் மட்டுமே இந்தப் பணி நடந்தது. ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக மின் உற்பத்தி நிறுத்தப்பட் டிருந்தது. ஒப்பந்தத்தை மீறி மின் உற்பத்தியை நிறுத்தியதாகக் கூறி, ராம்கி நிறுவனத்துக்கு மார்க்கெட் நிர்வாகம் அபராதம் விதித்தது.
இதுகுறித்து கோயம்பேடு மார்க்கெட் நிர்வாகக் குழு அலுவலக அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘ஒப்பந்தப்படி தினமும் காய்கறிக் கழிவுகளில் இருந்து 2,500 யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்து, மின் வாரியத்துக்கு ராம்கி நிறுவனம் விற்க வேண்டும். கடந்த 2 ஆண்டுகளாக மின் உற்பத்தி செய்யப்படவில்லை. தொழில்நுட்ப கோளாறு என்று காரணம் கூறப்பட்டது. ஒப்பந்தத்தின்படி ராம்கி நிறுவனத்துக்கு ரூ.1 கோடி அபராதம் விதித்து, அதை வசூலித்தோம். தற்போது கடந்த 45 நாள்களாக ராம்கி நிறுவனம் மின் உற்பத்தி செய்து வருகிறது’’ என்றார்.
இதுதொடர்பாக விளக்கம் கேட்க ராம்கி நிறுவன அதிகாரி ராஜேஷ்குமாரின் செல்போன் எண்ணில் பல முறை தொடர்பு கொள்ள முயன்றும் முடியவில்லை.
காய்கறிக் கழிவில் இருந்து மின் உற்பத்தி செய்யும் ராம்கி நிறுவனம்.