Published : 23 Sep 2021 03:14 AM
Last Updated : 23 Sep 2021 03:14 AM

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன்னேற்பாடுகள் இல்லாமல் நடந்த பட்டா மாறுதல் முகாம்: 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டதால் தள்ளுமுள்ளு

தி.மலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று சிறப்பு பட்டா மாறுதல் முகாமில் மனு அளிக்க நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்கள்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போதிய முன்னேற்பாடுகள் இல்லாமல் நடைபெற்ற சிறப்பு பட்டா மாறுதல் முகாமில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

தி.மலை மாவட்டத்தில் நிலுவையில் உள்ள பட்டா மாற்றம், உட்பிரிவு மாற்றுதல், எழுத்துப் பிழை, சர்வே எண் பிழை என பல்வேறு மனுக்களுக்கு தீர்வு காணும் வகையில் ஆட்சியர் அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடத்தப்படும் என ஆட்சியர் முருகேஷ் கடந்த வாரம் அறிவிப்பு வெளியிட்டார். அதன்படி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. இந்த முகாமில் மனு அளிப்பதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்தனர்.

மனு அளிப்பதற்காக திரண்ட கூட்டம் ஆட்சியர் வளாகத்தில் தொடங்கி அருகே உள்ள விளையாட்டு மைதானம் வரை பல அடுக்கு வரிசைகளாக சுற்றி, சுற்றி சுமார் 2 கி.மீ தொலைவுக்கு கால்கடுக்க நின்றனர். ஆரம்பத்தில் மனு அளிக்க முகக்கவசத்துடன் வந்தவர்களுக்கு கிருமிநாசினி கொடுக்கப்பட்டு மாவட்ட வருவாய் அலுவலர் முத்துக்குமாரசாமியிடம் மனு அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஒரு கட்டத்தில் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் ஆட்சியர் அலுவலக ஊழியர்களும், காவல் துறையினரும் திணறினர்.

நேரம் ஆக, ஆக வெயில் சுட்டெரிக்கத் தொடங்கியதால் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்தவர்கள் காவல் துறையின் கட்டுப்பாட்டை மீறி ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்தனர். ஒரே நேரத்தில் முண்டியடித்துச் செல்ல முயன்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. வேறு வழியில்லாமல் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துக்குமாரசாமி கூட்ட அரங்கில் இருந்து வெளியே வந்து வரிசையில் நின்றிருந்த பொதுமக்களிடம் நேரடியாக மனுக்களை பெற்றார்.

இது தொடர்பாக அதிகாரிகள் கூறும்போது, ‘‘தி.மலை மாவட்டத்தில் பட்டா பெயர் மாறுதல் குறித்த அதிக மனுக்கள் வருவதால் அவர்களின் கால விரயத்தை குறைக்க சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. மனுக்கள் மீது விசாரணை நடத்த அதிகாரிகள் வீடு தேடி சென்று பட்டா மாறுதல் ஆணையை வழங்குவார்கள். இந்த திட்டத்துக்கு மக்கள் மத்தியில் ஆதரவு அதிகம் இருந்ததால் எதிர்பார்த்ததைவிட அதிக கூட்டம் கூடிவிட்டனர்’’ என்றனர்.

தி.மலை மாவட்டத்தில் கரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. ஆனால், ஆட்சியர் அலுவலகத்தில்நடைபெற்ற சிறப்பு முகாமில் போதிய அளவில் முன்னேற்பாடுகள் எதுவும் செய்யாததால் அதிகளவிலான கூட்டம் கூடியது டன் கரோனா விதிகளை முற்றிலும் பின்பற்றவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

அதேநேரம், பட்டா பெயர் மாற்றம், திருத்தம் உள்ளிட்டவை மேற்கொள்ள அதிக லஞ்சம் கொடுக்க வேண்டி இருப்பதால் இதுபோன்ற முகாம்களால் நீண்ட நாள் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என மக்கள் நம்பியுள்ளனர். எனவே, ஆட்சியர் அலுவலகத்தில் இனி வாரந்தோறும் போதிய முன்னேற்பாடுகளுடன் சிறப்பு பட்டா பெயர் மாற்றம் முகாம் நடத்த வேண்டும் அல்லது வட்ட அளவில் முகாம் நடத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x