Published : 22 Sep 2021 06:52 PM
Last Updated : 22 Sep 2021 06:52 PM

திருவாரூர் அருகே கவுன்சிலர் இடைத்தேர்தல்: திமுக- இந்தியக் கம்யூனிஸ்ட் தனித்தனியே வேட்புமனுத் தாக்கல்

திருவாரூர்

திருவாரூர் அருகே கவுன்சிலர் இடைத்தேர்தலுக்குத் திமுக மற்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் தனித்தனியே வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளது திருவாரூர் மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்ட ஊராட்சி 11-வது வார்டு கவுன்சிலருக்கான இடைத்தேர்தல் வரும் 9-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் (22-ம் தேதி) முடிவடைந்தது. இந்நிலையில், திமுக கூட்டணிக் கட்சியில் இடம்பெற்றுள்ள இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மன்னார்குடி ஒன்றியச் செயலாளர் வீரமணி வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார். திமுக சார்பில் எஸ்.ஆர்.ரமேஷ் என்பவர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார்.

2019-ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின்போது இந்த 11-வது வார்டு மாவட்ட கவுன்சிலர் இடமானது திமுக கூட்டணியில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. அக்கட்சி சார்பில் கட்சியின் ஒன்றியச் செயலாளர் வீரமணி வேட்பாளராக நிறுத்தப்பட்டிருந்தார்.

இந்நிலையில், தேர்தல் வாக்குப் பதிவுக்கு முதல் நாள் இந்த வார்டில் வேட்புமனுத் தாக்கல் செய்த அதிமுக வேட்பாளர் மகாலிங்கம் என்பவர் உயிரிழந்தார். இதன் காரணமாக இந்த வார்டில் மட்டும் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டு மீதமுள்ள 17 வார்டுகளில் தேர்தல் நடத்தப்பட்டது. திமுக 10, இந்தியக் கம்யூனிஸ்ட் 3, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 1, அதிமுக 3 இடங்களில் வெற்றி பெற்றதன் அடிப்படையில் மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவியைத் திமுக கைப்பற்றியது.

இந்நிலையில் தற்போது நடைபெறும் இடைத்தேர்தலில் ஏற்கெனவே திமுக கூட்டணியில் ஒதுக்கியபடி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைத் திமுக ஆதரிக்க வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கோரியது. ஆனால், திமுக இதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டது.

இது தொடர்பாக திமுக சார்பில் மாவட்டச் செயலாளர் பூண்டி கலைவாணன் எம்எல்ஏ தலைமையில் நேற்று (21-ம் தேதி), சம்பந்தப்பட்ட 22 ஊராட்சிகளைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் கிளைச் செயலாளர்கள் கூட்டத்தைக் கூட்டி ஆலோசனை நடத்தப்பட்டது. திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதால் திமுக சார்பில் வேட்பாளர் நிறுத்தப்பட வேண்டும் எனக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

அதுபோல் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும் தனியாக ஆலோசித்தது. அதன்படி இன்றைய தினம் (22-ம் தேதி) திமுக, இந்தியக் கம்யூனிஸ்ட் ஆகிய இரண்டு கட்சிகளுமே தங்களது கட்சி சார்பில் வேட்பாளர்களைத் தனித்தனியாக வேட்புமனுத் தாக்கல் செய்ய வைத்துள்ளன.

நாளை மறுதினம் மாலை 5 மணிக்குள் வேட்புமனு வாபஸ் பெற வேண்டிய கால அவகாசத்துக்குள் இரண்டு கட்சிகளும் பேசி, சுமுகத் தீர்வு காண வேண்டுமென இரண்டு கட்சிகளின் தொண்டர்களும் எதிர்பார்க்கின்றனர்.

22 ஊராட்சிகளை உள்ளடக்கிய இந்த மாவட்ட கவுன்சிலர் பதவிக்கான இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும், திமுகவும் தனித்தனியாக வேட்புமனுத் தாக்கல் செய்திருப்பது திருவாரூர் மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x