

அதிமுக அரசு கடன் தள்ளுபடி அறிவித்த நிலையில் திமுக அரசு 51 சட்ட திட்டங்களை சொல்லிச் கடன் தள்ளுபடி செய்வதைக் குறைத்து, விவசாயிகளுக்கு பலன் கிடைக்காத வகையில் சட்டங்கள், விதிகளைக் கொண்டு வந்துள்ளதாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் குற்றம்சாட்டியுள்ளார்.
தாந்தோணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாவட்ட ஊராட்சி 8-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு அதிமுக சார்பில் தானேஷ் என்ற முத்துகுமார் இன்று (செப். 22-ம் தேதி) வேட்பு மனுத் தாக்கல் செய்தார். அவருடன் வந்திருந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
’’கடந்த 4 மாத திமுக ஆட்சியின் அவலங்களை எடுத்துரைத்து நாங்கள் இந்தத் தேர்தலில் நிச்சயம் வெற்றிபெறுவோம். அதிமுக அரசு ரூ.12,110 கோடி விவசாயக் கடன் மற்றும் நகை, மகளிர் சுயஉதவிக் குழு கடன்கள் தள்ளுபடியை அறிவித்தது. திமுக அரசு 51 சட்டதிட்டங்களைச் சொல்லி அதைத் தள்ளுபடி செய்வதைக் குறைத்து, விவசாயிகளுக்கு அந்த பலன் கிடைக்காத வகையில் செய்துள்ளனர். இதுவரை பயிர்க்கடன் வழங்கவில்லை.
திருமண மண்டபங்களில் நடைபெறும் திருமணங்களுக்கு தாலிக்குத் தங்கம், திருமண உதவித்தொகை கிடையாது எனவும் சில விதிகளைச் சொல்லி உள்ளனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் ஏழை, எளிய மக்களுக்கு வழங்கப்பட்ட திட்டங்களைக் குறைக்கவேண்டும். படிப்படியாக நிறுத்தவேண்டும் என்ற திமுக அரசின் எண்ணங்களை மக்களிடம் எடுத்துச் சொல்வோம்.
ராஜவாய்க்கால் பல ஆண்டுகளுக்குப் பிறகு தூர்வாரப்பட்டதாகக் கூறுகின்றனர். கடந்த ஆண்டு அப்போதைய முதல்வர் தமிழகத்தில் முதன்முதலாகத் தூர்வாரும் பணியை அறிவித்தபோது அதை முதன்முதலில் கரூர் மாவட்டத்தில் செயல்படுத்தினோம். பள்ளபாளையம் ராஜவாய்க்காலின் நீர்ப் பாசன சங்கப் பொறுப்பாளர் என்ற முறையில் கூறுகிறேன்.
கடந்தாண்டுகூட ராஜவாய்க்கால் தூர்வாரப்பட்டது. கடைமடை வரை தண்ணீர் சென்றது.ஆட்சி மாற்றத்தால் பணிகள் நிறுத்தப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் பணிநடந்து வருகிறது.
மின்தடை பற்றிக் கேட்டால் அமைச்சர் அணில் கதை சொல்கிறார். கடந்த ஆட்சியில் 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்பட்ட நிலையில் தற்போது எந்த நேரத்தில் மின்சாரம் வருகிறது. எந்த நேரத்தில் போகிறதென்றே தெரியவில்லை’’.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
பேட்டியின் தொடக்கத்தில், எதிர்க்கட்சித் தலைவர் என்பதற்கு பதிலாக, முதல்வரின் வழிகாட்டுதலின்படி தேர்தல் பணிகளைச் சிறப்பாக செய்து, 4 மாத திமுக ஆட்சியின் அவலங்களை எடுத்துரைத்து நாங்கள் இந்த தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என எம்.ஆர்.விஜயபாஸ்கர் தவறுதலாகக் குறிப்பிட்டார்.