

கடலூர் முந்திரி ஏற்றுமதி நிறுவனத் தொழிலாளி கோவிந்தராசுவின் உடலைப் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவர்கள் பிரேதப் பரிசோதனை செய்ய உத்தரவிட்டுள்ள சென்னை உயர் நீதிமன்றம், மரண வழக்கு விசாரணை குறித்த அறிக்கையை 4 வாரங்களில் தாக்கல் செய்யக் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் பணிக்கன்குப்பம் பகுதியில், திமுகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.வி.ரமேஷுக்குச் சொந்தமான முந்திரி ஏற்றுமதி நிறுவனத்தில் பணியாற்றி வந்த மேல்மாம்பட்டைச் சேர்ந்த தொழிலாளர் கோவிந்தராசு மர்மமான முறையில் மரணமடைந்தார்.
செப்டம்பர் 19ஆம் தேதி வேலைக்குச் சென்று வீடு திரும்பாத தந்தையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், திமுக எம்.பி. ரமேஷ் மற்றும் அவரது நிறுவனத்தைச் சேர்ந்தவர்களும்தான் மரணத்துக்குக் காரணம் என்றும், தனது தந்தையின் உடலில் பல ரத்த காயங்கள் மற்றும் அடித்துத் துன்புறுத்திய அடையாளங்கள் இருந்ததாகவும் கோவிந்தராசுவின் மகன் செந்தில்வேல் வழக்குத் தொடர்ந்தார்.
தனது தந்தை கொலை செய்யப்பட்டிருப்பதாகவும், இதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ்தான் காரணம் எனவும், தனது தந்தையின் மரணத்தை உரிய முறையில் காவல்துறை விசாரிக்கவில்லை என்றும், தந்தையின் மரணம் தொடர்பான காடாம்புலியூர் காவல் நிலைய வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற உத்தரவிடக் கோரியும் செந்தில்வேல் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
மரணத்தில் சந்தேகம் இருப்பதால் தந்தையின் உடலைப் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர்களைக் கொண்டு பிரேதப் பரிசோதனை செய்ய உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி நிர்மல்குமார் முன்பு இன்று (செப். 22) விசாரணைக்கு வந்தபோது, அரசுத் தரப்பில் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருக்கும் உடலை அங்குள்ள மூன்று மருத்துவர்கள் மூலம் பிரேதப் பரிசோதனை செய்யவும், அதனை வீடியோ பதிவு செய்யத் தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அப்போது,மனுதாரார் விரும்பினால் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் இருந்து ஒரு மருத்துவரை அனுமதிப்பதாகவும் நீதிபதி தெரிவித்தார். ஆனால், மனுதாரர் தரப்பில், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில், அதன் மருத்துவர்களைக் கொண்டுதான் பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இதையடுத்து, உத்தரவு பிறப்பித்த நீதிபதி நிர்மல்குமார், விழுப்புரம் அரசு மருத்துவமனையில் உள்ள கோவிந்தராசுவின் உடலைப் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர்கள் குழு, நாளை பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.
கோவிந்தராசுவின் மரணம் தொடர்பாக, காடாம்புலியூர் காவல் நிலையத்தினர் ஆரம்பக்கட்ட விசாரணை நடத்திவரும் நிலையில், அதை சிபிஐ விசாரணைக்கு மாற்றுவது குறித்து முன்கூட்டியே முடிவெடுக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார். இருப்பினும், ஆய்வாளரின் விசாரணையை பண்ருட்டி டிஎஸ்பி கண்காணிக்கவும், அதை கடலூர் எஸ்.பி. மேற்பார்வையிட வேண்டுமெனவும் நீதிபதி உத்தரவிடுள்ளார்.
காவல்துறையினரின் விசாரணை குறித்த அறிக்கையைத் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை அக்டோபர் 25ஆம் தேதிக்குத் தள்ளிவைத்துள்ளார்.