Last Updated : 22 Sep, 2021 02:42 PM

 

Published : 22 Sep 2021 02:42 PM
Last Updated : 22 Sep 2021 02:42 PM

புதுச்சேரியில் மூன்று கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல்: தேதிகள் அறிவிப்பு - முழு விவரம்

புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல் அட்டவணையை வெளியிட்டார் மாநிலத் தேர்தல் ஆணையர் ராய் பி.தாமஸ். அருகே உள்ளாட்சித் துறைச் செயலர் மஞ்சுளவள்ளி, இயக்குநர் ரவிதீப்சிங் சாகர், சிறப்பு அதிகாரி அர்ஜூன் ராமகிருஷ்ணா, ஆலோசகர் சந்திரசேகரன் ஆகியோர் உடனிருந்தனர் | படம்: எம். சாம்ராஜ்.

புதுச்சேரி

புதுச்சேரி மாநிலத்தில் அக்டோபர் 21, 25, 28 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் கடைசியாகக் கடந்த 2006ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அதன் பிறகு பல்வேறு காரணங்களால் தேர்தல் நடத்தப்படவில்லை. இந்நிலையில் அக்டோபர் 15-ம் தேதிக்குள் புதுச்சேரி மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தப் பணிகள் நடந்தன. இந்நிலையில் தேர்தல் தேதியை மாநிலத் தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.

இதுகுறித்துப் புதுச்சேரி தலைமைச் செயலகத்தில் மாநிலத் தேர்தல் ஆணையர் ராய் பி.தாமஸ் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"புதுச்சேரியில் உள்ள 5 நகராட்சிகள் மற்றும் 10 கொம்யூன் பஞ்சாயத்துகளில் உள்ள 1,149 பதவிகளுக்கும் (5 நகராட்சித் தலைவர் பதவிகள், 116 நகராட்சி கவுன்சிலர் மற்றும் 10 கொம்யூன் பஞ்சாயத்துகளில் உள்ள 108 கொம்யூன் பஞ்சாயத்து கவுன்சில் உறுப்பினர், 108 கிராமப் பஞ்சாயத்துத் தலைவர் மற்றும் 812 கிராமப் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்) உள்ளாட்சித் தேர்தல் மூன்று கட்டங்களாக நடக்கிறது.

முதல் கட்டமாக காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய நகராட்சிகளுக்கு அக்டோபர் 21-ம் தேதியும், இரண்டாம் கட்டமாக புதுச்சேரி, உழவர்கரை நகராட்சிகளுக்கு அக்டோபர் 25-ம் தேதியும், 3-ம் கட்டமாக புதுச்சேரியிலுள்ள 5 கொம்யூன் பஞ்சாயத்துகளுக்கு அக்டோபர் 28-ம் தேதியும் தேர்தல் நடைபெறுகிறது.

முதல்கட்டத் தேர்தல் வேட்புமனுத் தாக்கல் செப்டம்பர் 30-ம் தேதி தொடங்கி அக்டோபர் 7ஆம் தேதி நிறைவடைகிறது. இரண்டாம் கட்டத் தேர்தல் வேட்புமனுத் தாக்கல் அக்டோபர் 4-ம் தேதி தொடங்கி அக்டோபர் 11-ம் தேதி நிறைவடைகிறது. மூன்றாம் கட்டத் தேர்தல் வேட்புமனுத் தாக்கல் அக்டோபர் 7-ம் தேதி தொடங்கி அக்டோபர் 15ஆம் தேதி நிறைவடைகிறது.

மூன்றுகட்ட வாக்குப்பதிவுகள் முடிந்தபின், வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 31-ம் தேதி நடைபெறுகிறது. வாக்குப் பதிவு நேரம் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை இருக்கும். இதில் கடைசி ஒரு மணி நேரமாக மாலை 5 மணி முதல் 6 மணி வரை கரோனா நோயாளிகள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த உள்ளாட்சித் தேர்தலில் 10 லட்சத்து 3 ஆயிரத்து 755 வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர். அதில் 4 லட்சத்து 72 ஆயிரத்து 202 பேர் ஆண்கள், 5 லட்சத்து 30 ஆயிரத்து 930 பேர் பெண்கள், 117 திருநங்கைகள் உள்ளனர்.

தேர்தலை நடத்துவதற்கு 8,500 அரசு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கரோனா வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. இணையதளம் மூலமாக வேட்புமனுவைத் தாக்கல் செய்யலாம். வேட்பாளர்கள் கண்டிப்பாக கரோனா தடுப்பூசி போடவேண்டும் என்று உத்தரவிட இயலாது."

இவ்வாறு ராய் பி.தாமஸ் தெரிவித்தார்.

கடந்த 2011-ல் நடக்க வேண்டிய இத்தேர்தல் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு 2021-ல் நடக்கிறது. இதுவரை புதுச்சேரியில் இரு முறை மட்டுமே உள்ளாட்சித் தேர்தல் நடந்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x