

தமிழ்நாட்டில் உள்ள கோவளம், புதுச்சேரியில் உள்ள ஈடன் கடற்கரைகளுக்கு உலகப் புகழ்பெற்ற நீலக்கொடி சான்றிதழ் கிடைத்துள்ளது.
சிறந்த, சுற்றுச்சூழல் மிக்க, கடல்சார் சூழலியைப் பேணிக் காக்கும் அழகிய கடற்கரைக்கு நீலக்கொடி சான்றிதழ் வழங்கப்படுகிறது. டென்மார்க் சுற்றுச்சூழல் கல்வி அறக்கட்டளை சார்பில் இந்தச் சான்றிதழ் வழங்கப்படுகிறது.
முன்னதாக, இந்தியா முழுவதும் கர்நாடகா, ஆந்திரா, கேரளா, ஒடிசா ஆகிய மாநிலங்களிலும் அந்தமான் நிகோபர், டையூ ஆகிய யூனியன் பிரதேசங்களிலும் உள்ள 8 கடற்கரைகள் நீலக்கொடி சான்றிதழைப் பெற்றிருந்தன.
இந்நிலையில், தமிழகத்தில் உள்ள கோவளம், புதுச்சேரியில் உள்ள ஈடன் கடற்கரைகளுக்கு, உலகப் புகழ்பெற்ற நீலக்கொடி சான்றிதழ் கிடைத்துள்ளது. இந்தத் தகவலை மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் கூறிய அவர், தற்போது இந்தியாவில் 10 சர்வதேச நீலக்கொடி சான்றிதழ் பெற்ற கடற்கரைகள் உள்ளன. இது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தூய்மையான மற்றும் பசுமையான இந்தியாவுக்கான பயணத்தில் இன்னுமொரு மைல்கல்லாக அமைந்துள்ளது என்று மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் தெரிவித்துள்ளார்.