Last Updated : 22 Sep, 2021 01:10 PM

 

Published : 22 Sep 2021 01:10 PM
Last Updated : 22 Sep 2021 01:10 PM

3 மாதக் குழந்தையை ரூ.1.80 லட்சத்துக்கு விற்ற தாய், தந்தை உட்பட 5 பேர் கைது

குழந்தையை விற்ற பெற்றோர்.

அரியலூர் 

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே 3 மாதப் பெண் குழந்தையை ரூ.1.80 லட்சத்துக்கு விற்பனை செய்த தாய், தந்தை உட்பட 5 பேரை போலீஸார் இன்று (செப்.22) கைது செய்தனர்.

ஜெயங்கொண்டம் அருகே உள்ள வடவீக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சரவணன்- மீனா தம்பதியினர். இவர்களுக்கு சஞ்சனா, சாதனா, பிரியதர்ஷினி, சுபஸ்ரீ உள்ளிட்ட நான்கு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் இவர்களுக்கு நான்காவதாக பிறந்த சுபஸ்ரீக்கு மூன்று மாதங்களே ஆன நிலையில் அந்தக் குழந்தையை ஈரோடு பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன், செந்தில்குமார், மண்ணச்சநல்லூரைச் சேர்ந்த முத்தையன் ஆகியோர் மூலம் கோயம்புத்தூரில் உள்ள ஒரு தம்பதியருக்கு குழந்தை இல்லாத காரணத்தினால் ரூ.1.80 லட்சத்துக்கு நேற்று விற்பனை செய்துள்ளனர்.

இதுகுறித்துத் தகவலறிந்த, மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் துரைமுருகன் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டபோது, குழந்தையை விற்பனை செய்தது உண்மை எனத் தெரியவந்தது. இதையடுத்து, ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் துரைமுருகன் புகார் அளித்தார். இதையடுத்து காவல்துறையினர் தம்பதியர் குறித்து வடவீக்கம் கிராமத்தில் விசாரணையைத் தொடங்கினர்.

விசாரணையில் அவர்களுக்கு 4 பெண் குழந்தைகள் உள்ளது தெரியவந்தது. கடந்த சில தினங்களாக வீட்டிற்கு மர்ம நபர்கள் வந்து செல்வதாகவும், தற்போது அந்தக் குழந்தையைக் காணவில்லை என்றும் அக்கம் பக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து விசாரணையைத் தீவிரப்படுத்திய காவல்துறையினர், பெற்றோர்களிடம் விசாரித்தபோது நான்காவது குழந்தையை விற்பனை செய்ததாக ஒப்புக்கொண்டனர்.

இதையடுத்து கோயம்புத்தூரில் இருந்த 3 மாதப் பெண் குழந்தையை போலீஸார் மீட்டனர். குழந்தை விற்பனையில் ஈடுபட்ட தாய், தந்தை உட்பட 5 பேரைக் கைது செய்த போலீஸார், இச்சம்பவம் குறித்து மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவம் ஜெயங்கொண்டம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x