Published : 24 Feb 2016 02:21 PM
Last Updated : 24 Feb 2016 02:21 PM

தேர்தலில் அதிமுக, மக்கள் நலக் கூட்டணி இடையே தான் போட்டி: திருமாவளவன் நம்பிக்கை

வருகின்ற சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக, மக்கள் நலக் கூட்டணி இடையே தான் போட்டி இருக்கும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

டெல்லி ஜவகர்லால்நேரு பல்கலைக்கழக மாணவர் பேரவைத் தலைவர் கண்ணையாகுமாரை தேச விரோத வழக்கில் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், அவரை உடனடியாக விடுவிக்கக் கோரியும் உளுந்தூர்பேட்டையில் மக்கள் நலக் கூட்டணி சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் பேரவைத் தலைவர் மீதும், அவரோடு சிலர் மீதும் பொய் வழக்கு போடப்பட்டுள்ளதை விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. உடனடியாக அவர்கள் மீதான தேச விரோத வழக்கை ரத்து செய்வதோடு, அவர்களை விடுவிக்க வேண்டும்.

தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த ஹெச்.ராஜா அவ்வப்போது வன்முறையை தூண்டும் வகையில், சமூக அமைதியை சீர்குலைக்கும் வகையில் பேசுவது தேவையற்றது. அண்மையில் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவியாக உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் ராஜா அவர்களின் மகளை அவரே சுட்டுத் தள்ளும்படி கூற வேண்டும் என ஹெச்.ராஜா பேசியிருப்பது மிகவும் அறுவறுப்பான ஒன்றாகும். இதற்கு அவர் வெளிப்படையாக மன்னிப்பு கோர வேண்டும். இவ்வாறு வன்முறைகளை தூண்டும் கருத்துக்களை கூறி வருகின்ற ஹெச்.ராஜா மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மக்கள் நலக் கூட்டணி மகத்தான சக்தியாக வலுப்பெற்று வருவதை பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள் பல்வேறு வகையில் விமர்சித்து வருகின்றனர் அதை நாங்கள் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. ஊழலை ஒழிக்க, மதுவை ஒழிக்க விரும்புகிறவர்கள் மக்கள் நலக் கூட்டணிக்கு வரலாம் என ஏற்கெனவே நாங்கள் அழைப்பு விடுத்துள்ளோம்.

தமிழகத்தில் மக்கள் நலக் கூட்டணியை மக்கள் ஒரு மாற்று சக்தியாக நினைக்கின்றார்கள் என்பது எங்களால் உணர முடிந்தது. தமிழகத்தில் வரும் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுக்கும், மக்கள் நலக் கூட்டணிக்கும் இடையே தான் போட்டி என்கிற வகையில் இந்த களம் அமையும் என நம்புகிறோம். அந்த அளவுக்கு மக்கள் நலக் கூட்டணி மீதான நம்பகத்தன்மை நாளுக்கு நாள் வலுபெற்று வருவதை சுற்றுப்பயணத்தின் மூலமும், சமூக வலை தளங்களில் நடுநிலையாளர்கள் செய்கின்ற பதிவுகள் மூலமும் அறிந்துகொள்ள முடிகிறது. இவ்வாறு தெரிவித்தார்.

விழுப்புரம்

முன்னதாக விழுப்புரத்தில் நடந்த விடுதலை சிறுத்தை கட்சியின் சிறப்பு செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட தொல். திருமாவளன் நிருபர்களிடம் கூறியதாவது: மக்கள் நலக் கூட்டணியின் 2ம் கட்ட சுற்றுப் பயணம் 12 மாவட்டங்களில் முடிவடைந்துள்ளது. 3ம் கட்ட சுற்றுப் பயணத்தை வருகிற மார்ச் 1ம்தேதி தொடங்கி 4ம்தேதி வரை வட மாவட்டங்களான வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, விழுப்புரம், சேலம் ஆகிய 8 மாவட்டங்களில் மக்களை சந்திக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

விரைவில் மக்கள் நலக் கூட்டணி தலைவர் கூடி தொகுதி பங்கீடு குறித்து அறிவிப்போம். மேலும் சில கட்சிகள் மக்கள் நலக் கூட்டணிக்கு வர வாய்ப்பு உள்ளது. எங்கள் கூட்டணிக்கு வரும் கட்சிகளை வரவேற்போம், என்றார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x