Published : 21 Feb 2016 10:32 AM
Last Updated : 21 Feb 2016 10:32 AM

திமுக கூட்டணி அமையாமல் தடுக்க உளவுத் துறை சதி: கருணாநிதி குற்றச்சாட்டு

திமுகவோடு எந்தக் கட்சியும் கூட்டணி அமைத்துவிடக் கூடாது என்பதற்காக உளவுத் துறையுடன் இணைந்து எதிரிகள் சதி செய்வதாக திமுக தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் வரும் 22-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை அண்ணா அறிவாலயத்தில் நேர்காணல் நடக்கவுள்ளது. விருப்ப மனு அளித்தவர்கள் அனைவரும் ஏதோ ஒரு வகையில் திமுகவுக்காக உழைத்தவர்கள். பலர் கட்சிக்காக போராடி சிறை சென்றவர் கள் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

ஆனால், திமுகவின் சார்பில் ஒரு தொகுதிக்கு ஒருவரைத்தான் வேட்பாளராக நிறுத்த முடியும். அந்த ஒருவரை தேர்வு செய்வது எவ்வளவு கடினமானது என்பதை அனைவரும் அறிவர். வாய்ப்பு வரும்வரை காத்திருப்பவர்களுக்குத்தான் காரியம் கைகூடும் என்பதை மறக்கக் கூடாது.

கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகளை இனிதான் முடிவு செய்ய வேண்டும். நேர்காணல் நடந்ததாலேயே அந்தத் தொகுதியில் திமுகதான் போட்டியிடும் என கருத முடியாது. எனவே, தேர்தலுக்கு முன்பே கட்சியினர் ஒருவருக்கொருவர் மோதும் நிலை ஏற்பட்டால் அதை ஊடகத்தினர் பெரிதாக்கிவிடுவார்கள்.

திமுகவோடு எந்தக் கட்சியும் கூட்டணி அமைத்துவிடக் கூடாது என்பதற்காக அதிமுக அரசின் உளவுத் துறையுடன் இணைந்து ஊடகத் துறையினர் ஒவ்வொரு நாளும் கற்பனை கதைகளை வெளியிட்டு மக்களை குழப்பி வருகின்றனர். எந்தக் கட்சிக்கு எத்தனை இடங்கள் என்பதை அவர்களே முடிவு செய்கிறார்கள்.

இந்தக் கட்சி, இந்தக் கட்சியோடு சேருவது நம்பிக்கை மற்றும் தத்துவ முரண்பாடாக இருக்கும் என்ற துவேஷ எண்ணத்தை விதைக்கின்றனர். வலியச் சென்று ஆளுங்கட்சிக்கு ஆள் சேர்க்கும் வேலையை செய்கின்றனர். தண்ணீரைவிட ரத்தம் கெட்டியானது என்பதை ஒவ்வொரு செயலின் மூலமும் அவர்கள் உணர்த்திக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் எப்படிப் பட்ட தகிடுதத்த வேலைகளிலும், தந்திரோ பாயங்களிலும் இறங்கினாலும் அவை அனைத்தையும் அடித்து நொறுக்கி தூள் தூளாக்கி தூக்கி எறிந்து விட்டு திமுக கூட்டணி வெற்றி பெறுவது உறுதி.

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x