கரோனா தடுப்பூசி போட பதிவு செய்வதாகக் கூறி வங்கி கணக்கில் பணம் திருடும் கும்பல்: மக்கள் விழிப்புடன் இருக்க போலீஸார் எச்சரிக்கை

கரோனா தடுப்பூசி போட பதிவு செய்வதாகக் கூறி வங்கி கணக்கில் பணம் திருடும் கும்பல்: மக்கள் விழிப்புடன் இருக்க போலீஸார் எச்சரிக்கை
Updated on
1 min read

கரோனா தடுப்பூசி போடுவதற்கு பதிவு செய்வதாகக் கூறி வங்கிகணக்கில் இருந்து பணத்தை கொள்ளையடிக்கும் சம்பவங்கள் நடப்பதால் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று போலீஸார் எச்சரித்துள்ளனர்.

இதுகுறித்து போலீஸார் தெரிவித்துள்ளதாவது:

கரோனா தடுப்பூசி போடுவதற்கு தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதை சில மோசடி கும்பல்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, பொதுமக்களிடம் இருந்து பணத்தை கொள்ளையடித்து வருகின்றனர்.

“நாடு முழுவதும் மக்களுக்கு இலவசமாக கரோனா தடுப்பூசி போடப்படவுள்ளது. தடுப்பூசி போடுபவர்களுக்கு அரசு சார்பில்பணம் கொடுக்கப்படும். தடுப்பூசிபோடுவதற்கு உங்கள் விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும்.நிவாரணத் தொகையை வழங்குவதற்கு வங்கி கணக்கு விவரங்களை கூற வேண்டும்” எனக் கூறி வங்கி கணக்கு விவரங்களை பெற்றுக் கொண்டு பணத்தை கொள்ளையடிக்கின்றனர்.

மேலும், ஒரு சிலரிடம், ‘‘உங்களுக்கு இலவசமாக தடுப்பூசி போட, உங்கள் செல்போன் எண்ணுக்கு வரும் ஓடிபி எண்ணை (ரகசிய குறியீட்டு எண்) தெரிவிக்கவும்’’ எனக் கூறி அவர்களின் வங்கி கணக்கில் இருந்து பணத்தை கொள்ளையடிக்கின்றனர்.

இதுகுறித்து போலீஸாருக்கு பலர் தகவல் கொடுத்துள்ளனர். பணத்தை இழந்தவர்கள் புகாராகவும் பதிவு செய்துள்ளனர். எனவே, இதுபோன்ற போலியான அழைப்புகளை நம்பி யாரும் வங்கிக் கணக்கு விவரங்களையும், ஓடிபி எண்ணையும் தெரி விக்க வேண்டாம்.

மேலும், கரோனா தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்துஆன்லைனில் தேடும்போது, பிரபல மருத்துவமனைகளின் பெயர்களில் போலியான வெப்சைட்டுகள் வருகின்றன. அதை அறியாமல் கிளிக் செய்து உள்ளேசென்றால், கரோனா தடுப்பூசிக்கான தொகை என ரூ.2 ஆயிரம் முதல் ரூ.6 ஆயிரம் வரை உள்ளது.இது போலியான வெப்சைட் என்பதை அறியாமல் பலர் அதில் பணம் செலுத்தி ஏமாந்துள்ளனர்.

எனவே, பொதுமக்கள் இதுபோன்ற மோசடி கும்பலிடம் எச்சரிக்கையுடன் இருக்கும்படி போலீஸார் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in