

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே காரில் வைத்திருந்த பட்டாசுகள் வெடித்ததில் கார் மற்றும் அருகில் இருந்த 30 வீடுகள் சேதமடைந்தன.
சாத்தான்குளம் அருகே உள்ள குமரன்விளையைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (44). திசையன்விளை அருகே உள்ள அணைக்கரை பகுதியில் பட்டாசு தயாரிப்பு மற்றும் சேமிப்பு குடோன் வைத்து உள்ளார். அங்கு வாணவெடி உள்ளிட்ட பல்வேறு பட்டாசுகளைத் தயாரித்து கோயில் விழா, திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு விற்பனை செய்து வருகிறார்.
நேற்று அதிகாலை 2 மணியளவில் குடோனில் இருந்து இவர் தனது காரில் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது ஒரு நிகழ்ச்சிக்கு விற்பனை செய்வதற்காக சுமார் ரூ.30 ஆயிரம் மதிப்பிலான பட்டாசுகளை, தனது காரின் சீட்டுக்கு அடியில் வைத்திருந்தார். காரை வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு ரிமோட் மூலம் கார் கதவுகளை மூடியுள்ளார்.
அப்போது, திடீரென காருக்குள் இருந்த பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. இதில் கார் முற்றிலும் சேதமானது. அவரது வீடு உட்பட அருகில் உள்ள 30 வீடுகளின் மேற்கூரை, சுற்றுச்சுவர், ஜன்னல் கண்ணாடிகள் சேதமடைந்தன. சுவர்களில் விரிசல்கள் ஏற்பட்டன. பாலகிருஷ்ணனுக்கு லேசான காயம் ஏற்பட்டது.
இதுகுறித்து மாவட்ட எஸ்பி எஸ்.ஜெயக்குமார், டிஎஸ்பி கண்ணன், காவல் ஆய்வாளர் பாஸ்கரன் மற்றும் போலீஸார் விசாரணை நடத்தினர். திருச்செந்தூர் கோட்டாட்சியர் மு.கோகிலா, சாத்தான்குளம் வட்டாட்சியர் விமலா ஆகியோரும் விசாரணை மேற்கொண்டனர். காரில் அனுமதியின்றி பட்டாசுகளை வைத்திருந்ததாக பாலகிருஷ்ணனை தட்டார்மடம் போலீஸார் கைது செய்தனர்.