கிரானைட் நடைபாதை திட்டம் மறுபரிசீலனை அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

கிரானைட் நடைபாதை திட்டம் மறுபரிசீலனை அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
Updated on
1 min read

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்ட அறிக்கை:

பாதசாரிகளின் அளவு, இடத்துக்கேற்ப சாலைகளின் இருபுறமும் நடைபாதை அமைப்பதும், அவை நடக்க ஏதுவாக இருக்கிறதா என்பதை கண்காணிப்பதும், ஆக்கிரமிக்கப்படாமல் பார்த்துக் கொள்வதும் அரசின் கடமை. ஆனால், நடைபாதைகளை பொருத்தவரை, பாதசாரிகளுக்கு சில சிரமங்கள் இருப்பதாக தெரியவருகிறது.

சென்னையில் ஏற்கெனவே நல்ல நிலையில் இருக்கும் நடைபாதைகளில் இருந்து கற்கள், சிமென்ட் கற்களை பெயர்த்து குப்பையில் வீசிவிட்டு, அதற்கு பதிலாக புதிய கிரானைட் கற்கள் பொருத்தப்படுவதாக பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது.

ஏற்கெனவே இருந்த கருங்கற்கள், சிமென்ட் கற்களாலான நடைபாதைகள் அனைத்து தரப்பினரும் நடக்க ஏதுவாக இருந்தன. மழைக்காலத்திலோ, தண்ணீர் தேங்கி இருந்தாலோ, இந்த நடைபாதைகள் சறுக்காமல் பிடிமானத்துடன் இருந்தன.

ஆனால், தற்போது உள்ள கிரானைட் கற்களாலான நடைபாதைகள் சறுக்கும் தன்மையுடன் உள்ளன. இதனால், மூத்த குடிமக்கள், சிறுவர்கள், கர்ப்பிணிகள் நிலை தடுமாறும் சூழல் உள்ளது. இதன் காரணமாக, நடைபாதைக்கு பதிலாக சாலை ஓரத்தில் நடந்துசெல்வதாக பாதசாரிகள் தெரிவிக்கின்றனர்.

தவிர, நல்ல நிலையில் இருக்கும் நடைபாதைகளை பெயர்த்து வீசுவதால், மக்களின் வரிப் பணம் வீணடிக்கப்படுவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர். மொத்தத்தில், அரசுப் பணம் வீண், மக்களுக்கு அச்சம் என்ற இரட்டிப்பு பாதிப்பை இது ஏற்படுத்தியுள்ளது.

மக்களுக்காகவே திட்டங்கள்; திட்டங்களுக்காக மக்கள் அல்ல. எனவே, மக்களின் வரிப் பணத்தை வீணாக்குகிற, மக்களுக்கு அச்சத்தையும், விபத்துகளையும், அதன்மூலம் உயிரிழப்புகளையும் ஏற்படுத்துகிற இத்திட்டத்தை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

முதல்வர் உடனே இதில் கவனம் செலுத்தி, உண்மை நிலையை கண்டறிந்து, பாதசாரிகளின் கருத்துகளையும் கேட்டறிந்து, அரசுப் பணம் வீணாவதை தடுத்து, பாதசாரிகளின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in