

சென்னை எஸ்ஆர்எம் கல்வி நிறுவனத்தின் தமிழ்ப் பேராயம் சார்பில், சிறந்த தமிழ் நூல்கள், தமிழறிஞர்கள் உள்ளிட்ட பிரிவுகளில் ஆண்டுதோறும் 12 வகையான விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து அந்த அமைப்பின் புரவலர் பாரிவேந்தர் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
''2012 முதல் தமிழ்ப் பேராயம் விருதுகளை வழங்கி வருகிறோம். இந்த விருதுகள் மொத்தம் ரூ.20 லட்சம் ரொக்கப் பரிசு கொண்டவை. இந்த ஆண்டுக்கான விருதுகளை நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு தேர்வு செய்தது.
விருதுக்குத் தேர்வானோர் விவரம்:
புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது - அ.வெண்ணிலா (கங்காபுரம்), முத்து நாகு (சுளுந்தீ). பாரதியார் கவிதை விருது - கடவூர் மணிமாறன் (குறிஞ்சிப் பூக்கள்). அழ.வள்ளியப்பா குழந்தை இலக்கிய விருது - வெற்றிச்செல்வன் (மழலையர் மணிப் பாடல்கள்). ஜி.யூ.போப் மொழிபெயர்ப்பு விருது - டாக்டர் பழனி (நாலடியார்).
அப்துல் கலாம் தொழில்நுட்ப விருது - வி.டில்லிபாபு (எந்திரத் தும்பிகள்). முத்துத் தாண்டவர் தமிழிசை விருது - டி.கேஎஸ் கலைவாணன் (நாடகமும், தமிழிசையும்). பரிதிமாற்கலைஞர் தமிழ் ஆய்வறிஞர் விருது - சி.மகேந்திரன் (அறிவு பற்றிய தமிழரின் அறிவு). முத்தமிழ் அறிஞர் கலைஞர் சமூகநீதி விருது - சி.மகேஸ்வரன் (இனக்குழு வரைவியல்). சுதேசமித்திரன் தமிழ் இதழ் விருது - மா.பூங்குன்றன் (தென்மொழி).
தொல்காப்பியர் தமிழ்ச் சங்க விருது - மணிமேகலை மன்றம், ராஜபாளையம். அருணாசலக் கவிராயர் விருது - திருபுவனம் ஜி.ஆத்மநாதன் தமிழ் இசைக் குழு. பாரிவேந்தர் பைந்தமிழ் விருது - பா.வளன் அரசு (மூத்த தமிழறிஞர்).
விருது வழங்கும் விழா சென்னை எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் நடைபெறும். விழா நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும்''.
இவ்வாறு பாரிவேந்தர் கூறினார்.
எஸ்ஆர்எம் தமிழ்ப் பேராயம் தலைவர் கரு.நாகராஜன், எஸ்ஆர்எம் பல்கலைக்கழக துணைவேந்தர் சி.முத்தமிழ்ச்செல்வன் உடனிருந்தனர்.