

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரில் அறிவிக்கப்பட்டபடி 'சற்றே குறைப்போம்', 'உபரி உணவை வீணாக்காமல் பகிர்வோம்', 'உபயோகித்த எண்ணெய்யின் மறுபயன்பாட்டுத் திட்டம்' ஆகிய 3 திட்டங்கள் தமிழகத்தில் முதன்முதலாக திருவள்ளூர் மாவட்டத்தில் தொடங்கப்பட்டது.
திருவள்ளூர் ஊரக வளர்ச்சி முகமை அலுவலக வளாகத்தில் நேற்று முன்தினம் மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை சார்பில் இத்திட்டங்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
நாம் உண்ணும் உணவு சரியானதா? பாதுகாப்பானதா? என்பதை உறுதி செய்வதற்கான இந்நிகழ்வின் போது செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்ததாவது:
எண்ணெய், சர்க்கரை, உப்பு ஆகியவற்றை கூடுதலாக உட்கொள்வதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் பொதுமக்களின் சுகாதாரத்தை பேணி பாதுகாக்க முடியும் என்பதற்காக, ’சற்றே குறைப்போம்’ என்கிற திட்டம் திருவள்ளூர் மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
அதேபோல், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் திருமண மண்டபங்கள், விழாக்கள், மாநாடுகள் போன்ற பல்வேறு நிகழ்வுகளில் சமைத்து கைபடாமல் இருக்கிற உபரி உணவை பசித்தவர்களுக்கு 100 சதவீதம் சேர்க்க ஏதுவாக அரசு, தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து, ’உபரி உணவை வீணாக்காமல் பகிர்வோம்’ திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
மேலும் பெரிய மற்றும் சிறிய உணவகங்களில் உணவை தயாரிக்கும்போது, அதே எண்ணெய் திரும்ப திரும்ப பயன்படுத்தப்படுவதால், உணவு செரிமான தன்மை குறைவு, குடல் பாதிப்புகள் போன்ற பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகவே, ஒரு லிட்டர் உபயோகித்த எண்ணெய் ரூ.30-க்கு வாங்கி, பயோ டீசல் தயாரித்து விற்பனை செய்யும் திட்டமாக 'உபயோகித்த எண்ணெய்யின் மறுபயன்பாட்டுத் திட்டம்' தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக பல்வேறு அமைப்புகளால் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில், அமைச்சர் மா.சுப்பிரமணியன், 'சற்றே குறைப்போம்' திட்ட விளம்பர பலகையை திறந்து வைத்ததோடு, உபரி உணவை வீணாக்காமல் பகிர்வு செய்யும் 3 வாகனங்கள், உபயோகித்த சமையல் எண்ணெய்யின் மறுபயன்பாட்டுத் திட்ட வாகனம் ஆகியவற்றின் செயல்பாட்டை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அதுமட்டுமல்லாமல், 10 நிறுவனங்களுக்கு உணவு பாதுகாப்பு காட்சி பலகைகளையும், உபயோகித்த சமையல் எண்ணெய்யின் மறுபயன்பாட்டு திட்ட 13 பயனீட்டாளர்களுக்கு காசோலைகள் மற்றும் சான்றிதழ்களையும் அமைச்சர் வழங்கினார்.
முன்னதாக, பெரும் நிறுவனங்களின் சமூக பங்களிப்பு நிதி உதவியுடன் தனியார் மருத்துவமனைகள் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட கரோனா தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு இலவசமாக செலுத்தும் சிறப்பு முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வுகளில், பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை ஆணையர் செந்தில்குமார், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், திருவள்ளூர் எம்பி ஜெயக்குமார் மற்றும் எம்எல்ஏக்கள் வி.ஜி.ராஜேந்திரன், கிருஷ்ணசாமி, சுதர்சனம், டி.ஜெ.கோவிந்தராசன், சந்திரன், கணபதி, துரை.சந்திரசேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.