Published : 22 Sep 2021 03:05 AM
Last Updated : 22 Sep 2021 03:05 AM

தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் மழைநீர் வடிகால் தூய்மைப் பணி தொடக்கம்: 9,097 இயந்திரங்களுடன், ஒரு லட்சம் ஊழியர்கள் பங்கேற்பு

சென்னை

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் தமிழகம் முழுவதும் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் 9,097 இயந்திரங்கள், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள், மேற்பார்வையாளர்கள் மூலம் மாபெரும்மழைநீர் வடிகால் தூய்மைப் பணி வரும் 25-ம் தேதி வரை மேற்கொள்ளப்படுகிறது.

இதுதொடர்பாக தமிழக அரசுநேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் எதிர்நோக்கியுள்ள வடகிழக்கு பருவமழையால் நகரப் பகுதிகளில் பல இடங்களில் வீடுகளுக்குள் வெள்ளம், மழைநீர் புகும் வாய்ப்பு உள்ளது. அதிகப்படியாக தேங்கும் மழைநீரால் டெங்கு, மலேரியா நோய் பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாகவும், இதர தொற்றுநோய்கள் பரவுவதற்கும் வாய்ப்பு உள்ளது.

எனவே, மக்களுக்கு எவ்விதசுகாதார இடர்ப்பாடும் ஏற்படாமல் தவிர்க்கும் நோக்கில், தமிழகம் முழுவதும் அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகளில் செப்டம்பர் 20 முதல் 25-ம் தேதி வரை மாபெரும் மழைநீர் வடிகால் தூய்மை பணிமுகாம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தை நகராட்சிநிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு கடந்த 20-ம் தேதி சேலம் மாநகராட்சியில் தொடங்கி வைத்துள்ளார்.

இப்பணிக்காக கால்வாய்கள், மழைநீர் வடிகால்கள் அனைத்தும் பெரியது, நடுத்தரம், சிறியது என வகைப்படுத்தப்பட்டுள்ளன. மழைநீர் வடிகால்களில் சேகரமாகிஉள்ள வடிகால் படிவுகளை அகற்ற பொக்லைன், ஜெட்ராடிங்,ஜேசிபி உள்ளிட்ட இயந்திரங்களை பயன்படுத்தி அனைத்துமாநகராட்சி, நகராட்சிகளிலும் இப்பணியை துரிதமாக மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

இப்பணிக்காக உள்ளாட்சிகளில் உள்ள வார்டுகளை 6 பிரிவுகளாக பிரித்து, 6 நாட்களுக்குள் பணியை முடிக்க ஏதுவாக நகரப் பகுதிகள் பங்கீடு செய்யப்பட்டு பணி மேற்கொள்ளப்படுகிறது.இதற்காக, சென்னை நீங்கலாக மற்ற 14 மாநகராட்சிகளில் உள்ள 829வார்டுகளில் 1,362 இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு, 23,838 பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். இப்பணியை மேற்பார்வையிட 1,572 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

7 நகராட்சி நிர்வாக மண்டலங்களில் 121 நகராட்சிகளில் உள்ள3,497 வார்டுகளில் 4,591 இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு 42,634பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். இப்பணியை 3,051 பேர் மேற்பார்வை செய்வார்கள்.

மொத்தம் உள்ள 528 பேரூராட்சிகளில் 7,951 கி.மீ. நீளமுள்ள மழைநீர் வடிகால்கள், 205 கி.மீ.நீளமுள்ள கால்வாய்கள் தூர்வாரப்பட உள்ளன. இதற்காக 2,830 இயந்திரங்கள், 28,624 பணியாளர்கள் பயன்படுத்தப்பட உள்ளனர்.

சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் 178 சாலைகளில் மழைநீர் வடிகால் தூய்மைப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்காக2,414 பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். தூய்மைப்படுத்தப்படும் மழைநீர் கால்வாயின் மொத்த தூரம் 83 கி.மீ. ஆகும்.

மழைநீர் வடிகால்களை தூய்மைப்படுத்தி எடுக்கப்படும் படிவுகளை அகற்றும் பணி 227 சாலைகளில் மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்காக 722 பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். இப்பணியில் 7 ஜெட்ராடிங் இயந்திரங்கள்,3 ரோபாடிக் எக்சிவேட்டர், 1 ஆம்பியன், 3 மினி ஆம்பியன் இயந்திரங்கள் ஈடுபடுத்தப்படுகின்றன.

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 15 மாநகராட்சிகள், 121 நகராட்சிகள், 528 பேரூராட்சிகளில் 9,097 இயந்திரங்கள் மூலம் மழைநீர்வடிகால் தூய்மை பணி மேற்கொள்ளப்படுகிறது. இப்பணிக்காக 97,550 பணியாளர்கள், 4,623 மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x