Last Updated : 22 Sep, 2021 03:05 AM

 

Published : 22 Sep 2021 03:05 AM
Last Updated : 22 Sep 2021 03:05 AM

விழுப்புரம் மாவட்ட உள்ளாட்சித் தேர்தலில் பதவிகள் ஏலம் விடப்படுவது ஏன்?

பொன்னங்குப்பம் கிராமத்தில் ஊராட்சி தலைவர் பதவி ஏலம் விடப்பட்டது குறித்து கிராம மக்களிடம் ஆட்சியர் மோகன் விசாரணை மேற்கொண்டார்.

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் உள்ளிட்ட பதவி கள் ஏலம் விடப்படுவதன் பின்னணி தகவல்கள் வெளியாகியுள்ளன.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சிஒன்றியத்துக்கு உட்பட்ட பொன்னங்குப்பம் ஊராட்சி துத்திப்பட்டு கிராமத்தில் கடந்த 15-ம் தேதி ஊராட்சி மன்றத் தலைவர் பதவி ரூ.13 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டதாக தகவல் வெளியானது. மேலும், 6 வார்டு உறுப்பினர்கள் பதவியும் ரூ.30 ஆயிரம் வரை ஏலம் போனது.கடந்த 19-ம் தேதி ஒன்றிய கவுன்சிலர்பதவியும் ரூ. 20 லட்சத்து 8 ஆயி ரத்து 100-க்கு ஏலம் விடப்பட்டது.

இதேபோல் காணை ஒன்றியத்துக்கு உட்பட்ட சித்தேரிப்பட்டு கிராமத்தில் ஊராட்சிமன்றத் தலைவர் பதவி ரூ.14 லட் சத்துக்கு ஏலம் விடப்பட்டதாகவும் தகவல்வெளியானது. மேலும், ஆங் காங்கே இதுபோன்ற புகார்கள் வருகின்றன.

காலங்காலமாக நடக்கும் தவறு

இதுகுறித்து கிராம மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடம் கேட்டபோது, "உள்ளாட்சித் தேர்தலைப் பொறுத்தவரையில் இந்ததவறு, காலங்காலமாக நடைபெற்று வருகிறது.

கிராமங்களில் நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான புளிய மரங்களில் புளி அறுவடை செய்ய கிராம மக்கள் குறைந்த தொகைக்குமொத்தமாக ஏலம் எடுப்பார்கள். பின்னர் அதனை கிராம மக்கள் தனி, தனியாக பிரித்து ஏலம் விடு வார்கள். இதன் அடிப்படையில் ஏரிகளில் மீன் பிடிப்பது தொடங்கி சில விஷயங்கள் நடைபெறும்.

அதன் தொடர்ச்சியாகவே இந்த உள்ளாட்சிப் பதவிகளை கிராம மக்கள் கருதுகின்றனர். ஊராட்சி மன்றத் தலைவர், உறுப்பினர், ஒன்றிய கவுன்சிலர் என ஏலம் விடுவது தொடர்கிறது. இப்படி விடப்படும் ஏலம் மூலம் கிடைக்கும் தொகையில் கிராமங்களில் வாய்க் கால்கள், ஏரிகள், குளங்கள் தூர்வாருவது என செலவு செய்வார்கள். பதவியை ஏலம் விடுவது தவறு என்பதை ஊரகப் பகுதிகளில் எடுத்துரைக்க வேண்டும்" என்றனர்.

நியாயப்படுத்த முடியாது

இதுகுறித்து விழுப்புரம் எம்பி ரவிக்குமாரிடம் கேட்டபோது, "உள்ளாட்சி அமைப்புகள் சரியாக செயல்பட்டால், கிராம கட்டமைப்பு வசதிகளை அரசு உரிய கவனத்தோடு மேம்படுத்த முயற்சி எடுத்தால் இப்படியான நிலைமைகள் குறையும். எதை காரணம் காட்டியும் ஏலம் விடுவதை நியாயப்படுத்த முடி யாது. உள்ளாட்சி நிர்வாகம் இல்லாததால் இப்படிப்பட்ட நிலை ஏற்படுகிறது. இடைவெளி இல்லாமல் உள்ளாட்சி நிர்வாகம் செயல்படவேண்டும்" என்றார்.

இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட தேர்தல் அலுவலரான ஆட்சியர் மோகனிடம் கேட்ட போது, 'பொன்னங்குப்பம், துத்திப்பட்டு கிராமங்களில் கடந்த 18-ம் தேதி நேரில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

ஏலம் விடப்பட்டதற்காக ஆதாரம் கிடைத்த உடன் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதனை கண்காணிக்க தவறிய வருவாய்த் துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறையினர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த சம்பவங்களில் கிராம மக்களின் கூற்றுக்களை ஏற்றுக்கொள்ள முடியாது. அது ஜனநாயத்துக்கு விரோதமானது" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x