Published : 08 Feb 2016 08:47 AM
Last Updated : 08 Feb 2016 08:47 AM

பழமைவாய்ந்த இலக்கியங்களைப் பெற்ற தமிழின் பெருமைகளை பிற மொழிகளுக்கு எடுத்துச் செல்ல வேண்டும்:மூ.ராசாராம்

தமிழின் பெருமைகளை பிற மொழிகளுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்று மாணவர்களுக்கு டிஎன்பிஎஸ்சி உறுப்பினர் மூ.ராசாராம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முதல்வர் ஜெயலலிதாவின் 68-வது பிறந்த நாளை ஒட்டி உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் சார்பில் பிப்ரவரி 1-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை ஒரு மாதத்துக்கு தமிழ்த்தாய் விழா நடத்தப்பட்டு வருகிறது. இவ்விழாவின் நேற்றைய நிகழ்வில், திருக்குறள் தொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையக் குழு (டிஎன்பிஎஸ்சி) உறுப்பினர் மூ.ராசாராம் எழுதிய விஸ்டம் ஆப் திருக்குறள், திருவள்ளுவர் அண்டு புத்தா ஃபார் பெட்டர் லைப், குளோரி ஆப் திருக்குறள் ஆகிய ஆங்கில நூல்கள் மற்றும் குறள் முத்துக்கள், நீதி இலக்கியங்களில் திருக்குறள் ஆகிய நூல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது. மக்கள் குரல் பத்திரிகை ஆசிரியர் ஆர்.முத்துக்குமார் வெளி யிட, தஞ்சை தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் இ.சுந்தரமூர்த்தி பெற்றுக்கொண்டார்.

விழாவில் நூலாசிரியர் மூ.ராசாராம் பேசியதாவது:

உலகில் சிறந்த பழமை வாய்ந்த இலக்கியங்களை பெற்ற மொழி தமிழ். இம்மொழியை மாணவர்கள் ஆர்வத்துடன் படிக்க வேண்டும். அதே வேளையில் பிற மொழிகளையும் கற்க வேண்டும். அதன் மூலம் தமிழ் படைப்புகளை பிற மொழிகளுக்கு எடுத்துச் சென்று, அதன் பெருமைகளை உலகம் அறியச் செய்ய வேண்டும். பல நாடுகளில் தமிழ் அறியப்படவில்லை. தமிழின் சிறப்புகளை உலகம் அறிய வேண்டும் என்பதற்காகத்தான் தமிழக முதல்வர் ஜெயலலிதா, உலகில் அதிகம் பேரால் பேசப்படும் மொழிகளான சீன மொழி, அரபி போன்றவற்றில் திருக்குறளை மொழிபெயர்க்க உத்தரவிட்டுள்ளார்.

திருக்குறளில் தெரிவிக் கப்படாத கருத்துகள் இல்லை. அதில் மேலாண்மை, நிர்வாகம், ஆளுமை சார்ந்த கருத்துகள் செரிந்து கிடக்கின்றன. திருக்குறளில் கூறப்பட்ட கருத்துகள், சென்ற நூற்றாண்டு, நடப்பு நூற்றாண்டு மட்டுமல்லாது வரும் நூற்றாண்டின் வாழ்வியல் முறைக்கும் பொருந்துவதாக இருக்கும் என்றார்.

விழாவில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் கோ.விசயராகவன், தனி அலுவலர் தா.மார்டின் செல்லதுரை, அயல்நாட்டு தமிழர் புலம் பொறுப்பாளர் து.ஜானகி ஆகியோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x