

பண்ருட்டி அடுத்த பணிக்கன்குப்பம் பகுதியில், கடலூர் திமுக எம்.பி. டி.ஆர்.வி.ரமேஷுக்கு சொந்தமான முந்திரி ஆலைசெயல்பட்டு வருகிறது.
இங்கு பணியாற்றிய தொழிலாளி மேல்மாம்பட்டை கோவிந்தராசு, மர்மமான முறையில் இறந்துகிடந்தார். அவரது மகன் செந்தில்வேல், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
அதில், "கடந்த 19-ம் தேதி வேலைக்குச் சென்ற எனது தந்தை வீடு திரும்பவில்லை. அவர் விஷம் குடித்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
மருத்துவமனைக்குச் சென்று பார்த்தபோது, அவரது உடலில் ரத்தக் காயங்கள் மற்றும் அடித்துதுன்புறுத்தியதற்கான அடையாளங்கள் இருந்தது. எனவே, எனது தந்தை அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது.
அவரது மரணம் குறித்து காடாம்புலியூர் போலீஸார் உரிய முறையில் விசாரிக்கவில்லை. எனவே, எனது தந்தையின் உடலைபுதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர்களைக் கொண்டு உடற்கூறு பரிசோதனை செய்ய உத்தரவிட வேண்டும். அத்துடன் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும்" என்று கோரிஇருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்னிலையில் நேற்று அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அப்போது அரசுத் தரப்பில், அரசு மருத்துவர்கள் 3 பேரைக் கொண்டு பிரேதப் பரிசோதனை செய்யவும், அதை வீடியோ பதிவு செய்யத் தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, மனுதாரர் விரும்பினால் சென்னையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவரை வைத்து, உடற்கூறாய்வு நடத்த அனுமதிக்கலாம் என்றார்.
ஆனால் மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கே.பாலு அதற்கு ஆட்சேபம் தெரிவித்தார்.
குற்றச்சாட்டுக்கு உரிய நபர் திமுக எம்.பி. என்பதாலும், அரசியல் செல்வாக்கு மிக்கவர் என்பதாலும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர்களைக் கொண்டு உடற்கூறாய்வு செய்ய வேண்டும் என்றார்.
அதையடுத்து, வழக்கு விசாரணையை இன்றைக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.