

மாநிலங்களவை எம்.பி தேர்தல் மனுத் தாக்கல் நாளை நிறைவடையும் சூழலில், புதுச்சேரியில் அந்த இடம் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. முன்னாள் நியமன எம்எல்ஏ செல்வகணபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
புதுச்சேரி மாநிலங்களவை எம்பி தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் நாளை நிறைவடைகிறது. ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிக் கூட்டணியிலிருந்து அரசியல் கட்சிகள் சார்பில் இதுவரை யாரும் மனுத் தாக்கல் செய்யவில்லை.
ஆளும் கட்சியான என்.ஆர்.காங்கிரசும், பாஜகவுக்கு இடையில் மாநிலங்களவை எம்.பியை பெறுவதில் போட்டி நிலவியது. அமைச்சர் நமச்சிவாயம் டெல்லியில் முகாமிட்டுள்ளார்.
பாஜக தரப்பில் விசாரித்தபோது, " முதல்வர் ரங்கசாமியிடம் பாஜக தலைமை நேரடியாக பேசியதில், மாநிலங்களவை எம்.பி.யை பாஜகவுக்கு தர அவர் சம்மதம் தெரிவித்துள்ளார். எம்.பி யார் என்பதை கட்சித்தலைமை தெரிவிக்கும். நாளை மனுதாக்கல் நடக்கும்" என்று தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் இன்று இரவு டெல்லி மேலிடம் பாஜக வேட்பாளரை அறிவித்துள்ளது. புதுச்சேரி மாநிலங்களவை எம்.பி வேட்பாளராக முன்னாள் நியமன எம்எல்ஏவும், கல்வியாளருமான செல்வகணபதி அறிவிக்கப்பட்டுள்ளார்.
புதுச்சேரி பாஜக பொருளாளராகவும் உள்ளார். ஆர்எஸ்எஸ் பின்புலம் உள்ள இவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.கல்வி நிறுவனங்கள் நடத்தி வருகிறார். புதுச்சேரியில் முதல் முறையாக மாநிலங்களவை எம்.பி இடத்தில் பாஜக போட்டி இன்றி வெல்ல உள்ளது.