Published : 21 Sep 2021 06:11 PM
Last Updated : 21 Sep 2021 06:11 PM

தமிழகத்தில்தான் தூய்மைப் பணியாளர்களின் நிலை மோசம்; தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையத் தலைவர் பேட்டி

உதகை

தூய்மைப் பணிகளை ஒப்பந்த அடிப்படையில் வழங்குவதை ரத்து செய்ய வேண்டும் என்று தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையத் தலைவர் எம்.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையத் தலைவர் எம்.வெங்கடேசன் இன்று உதகையில் தூய்மைப் பணியாளர்கள் வசிக்கும் பழைய உதகை மற்றும் காந்தல் பகுதிகளை இன்று (செப்.21) ஆய்வு செய்தார்.

பின்னர் தமிழகம் விருந்தினர் மாளிகையில் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்சினி தலைமையில் நடைபெற்ற அதிகாரிகளின் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றார்.

பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

''தூய்மைப் பணியாளர்கள் வசிக்கும் இடங்கள் மோசமாக உள்ளன. கதவுகள் இல்லை, கழிப்பிடம் இல்லை, சாலை பராமரிக்கப்படவில்லை. இந்நிலையில் உதகைக்கு எப்படி "சிறந்த நகராட்சி" என்ற விருது கொடுத்தார்கள் என்று தெரியவில்லை. தூய்மைப் பணி ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்படுவதால், பணியாளர்கள் பல இன்னல்களுக்கு ஆளாகின்றனர். நாடு முழுதும் தூய்மைப் பணிகளை ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்படுவதை ரத்து செய்ய வேண்டும். தமிழகத்தில் தூய்மை ஒப்பந்த முறையை ஒழிக்க வேண்டும் என்று தமிழக முதல்வருக்குக் கடிதம் எழுதியுள்ளோம்.

தூய்மைப் பணிகளை ஏன் ஒப்பந்த அடிப்படையில் வழங்க வேண்டும். தூய்மைப் பணியாளர்களின் உழைப்பை சுரண்டிக்கொண்டு ஒப்பந்ததாரர்கள் லாபம் அடைகின்றனர்.

கர்நாடகாவில் தூய்மைப் பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படுவதில்லை. அதேபோல் நிரந்தரப் பணியாளர்களாகவும் நியமிப்பதில்லை. அந்தந்த நகராட்சியே தூய்மைப் பணியாளர்களுக்கு மாதம் ரூ.18 ஆயிரம் ஊதியம் வழங்குகிறது. இந்த முறையை எல்லா மாநிலங்களும் பின்பற்ற தேசிய ஆணையம் பரிந்துரை செய்யும்.

முறையாக சம்பளம் வழங்காமல் தூய்மைப் பணியாளர்களை துன்புறுத்தும் ஒப்பந்ததாரர்களை பிளாக் லிஸ்ட்டில் வைத்து அவர்களது ஒப்பந்தத்தை ரத்து செய்யலாம்.

இதுவரை 7 மாநிலங்களுக்குச் சென்றுள்ளேன். இதில், தமிழகத்தில்தான் தூய்மைப் பணியாளர்களின் நிலை மோசமாக உள்ளது. தென்னிந்தியாவில் தூய்மைப் பணியாளர்கள் தங்கள் குறைகளைச் சொல்ல முன் வருவதில்லை. ஆனால், வட இந்தியாவில் தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை தைரியமாகச் சொல்கிறார்கள்.

தூய்மைப் பணியாளர்களைத் துன்புறுத்தும் ஒப்பந்ததார்களின் ஒப்பந்தத்தை,குடியரசுத் தலைவர் வரை சென்றுகூட ஒப்பந்தத்தை ரத்து செய்வோம். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் மனிதக் கழிவை மனிதர்களே அகற்றும் முறை இல்லை என்று மாநிலங்கள் கூறுகின்றன''.

இவ்வாறு எம்.வெங்கடேசன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x