

மாநிலங்களவை எம்.பி. தேர்தல் மனுத்தாக்கல் நாளை நிறைவடைகிறது. பாஜகவுக்கு இந்த இடம் உறுதியாகியுள்ளது. அதே நேரத்தில் என்.ஆர்.காங்கிரஸ் தரப்பில் புது நிபந்தனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலங்களவை எம்.பி. தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நாளை நிறைவடைகிறது. ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிக் கூட்டணியிலிருந்து அரசியல் கட்சிகள் சார்பில் இதுவரை யாரும் மனுத்தாக்கல் செய்யவில்லை. ஆளும்கட்சியான என்.ஆர்.காங்கிரஸுக்கும், பாஜகவுக்கும் மாநிலங்களவை எம்.பி.யைப் பெறுவதில் போட்டி நிலவியது. அமைச்சர் நமச்சிவாயம் டெல்லியில் முகாமிட்டுள்ளார்.
பாஜக தரப்பில் விசாரித்தபோது, "பாஜக தலைமை, முதல்வர் ரங்கசாமியிடம் நேரடியாகப் பேசியதில், மாநிலங்களவை எம்.பி.யை பாஜகவுக்குத் தர சம்மதம் தெரிவித்துள்ளார். எம்.பி. யார் என்பதைக் கட்சித் தலைமை தெரிவிக்கும். நாளை மனுத்தாக்கல் நடக்கும்" என்கின்றனர்.
பாஜக தரப்பில் தற்போது வேட்பாளரைத் தேர்வு செய்யும் பணி நடந்துவரும் சூழலில் முதல்வர் ரங்கசாமி இன்று மதியம் ஆளுநர் மாளிகை சென்று ஆளுநர் தமிழிசையைச் சந்தித்து பத்து நிமிடங்கள் பேசினார்.
இதுபற்றி என்.ஆர்.காங்கிரஸ் உயர் தலைவர்கள் தரப்பில் விசாரித்தபோது, "பாஜகவுக்கு எம்.பி. பதவியை விட்டுத் தந்துள்ளோம். கடந்த முறை என்.ஆர்.காங்கிரஸைச் சேர்ந்த கோகுலகிருஷ்ணனைக் கடைசி நேரத்தில் அதிமுகவில் சேர்த்து எம்.பி.யாக்கினார். அதேபோல் இம்முறையும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முக்கியப் பிரமுகரை பாஜக உறுப்பினராக்கி எம்.பி. பதவியை அவருக்குத் தரவேண்டும் என்ற கோரிக்கையை முதல்வர் வைத்துள்ளார்" என்று குறிப்பிடுகின்றனர்.
இனி பாஜக தலைமை இக்கோரிக்கைக்கு செவிசாய்க்குமா என்பது அடுத்து தெரியவரும்.