Last Updated : 21 Sep, 2021 04:02 PM

 

Published : 21 Sep 2021 04:02 PM
Last Updated : 21 Sep 2021 04:02 PM

மத்திய அரசு அனுமதி தராததால் பொருளாதார மண்டலத்துக்கான 750 ஏக்கர் நிலம் வீணாகவே உள்ளது: புதுவை முதல்வர் ரங்கசாமி குற்றச்சாட்டு

"சேதராப்பட்டில் சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்காக 750 ஏக்கர் நிலத்தை எடுத்து வைத்திருந்தும், மத்திய அரசு அனுமதி தராமல் கடந்த 10 ஆண்டுகளாக வீணாகவே உள்ளது. புதுவையில் கடந்த காலங்களில் இருந்ததைப் போல் பல தொழிற்சாலைகள் இப்போது இல்லை. பல தொழிற்சாலைகள் போய்விட்டன" என்று ஏற்றுமதியாளர்கள் மாநாட்டில் முதல்வர் ரங்கசாமி குற்றம் சாட்டினார்.

நாட்டின் 75-வது சுதந்திர தினக் கொண்டாட்டத்தையொட்டி, புதுச்சேரி மாநிலத்தின் பொருளாதாரம் மற்றும் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில் 'வாணிஜ்ய உத்சவ்" என்ற பெயரில் ஏற்றுமதியாளர்கள் மாநாடு மற்றும் கண்காட்சி, புதுச்சேரி பல்கலைக்கழக கலாச்சார மையத்தில் இன்று நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினர்களாக ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் முதல்வர் ரங்கசாமி கலந்துகொண்டு மாநாடு மற்றும் கண்காட்சியைத் தொடங்கி வைத்தனர்.

விழாவில் பேசிய முதல்வர் ரங்கசாமி, "புதுச்சேரியில் அரசு எடுத்து வரும் நடவடிக்கையின் காரணமாக கரோனா தொற்று குறைந்து, தொழிற்சாலைகள் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளன. புதுவையில் கடந்த காலங்களில் இருந்ததைப் போல் பல தொழிற்சாலைகள் இப்போது இல்லை. பல தொழிற்சாலைகள் போய்விட்டன. தொழிலாளர்கள் போராட்டம், தொழிலதிபர்கள் எதிர்பார்த்த சலுகையின்மை போன்ற காரணங்களால் பல தொழிற்சாலைகள் வெளியே சென்றுவிட்டன. குறிப்பாக சேதராப்பட்டில் சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்காக 750 ஏக்கர் நிலத்தை எடுத்து வைத்திருந்தும், மத்திய அரசு அனுமதி தராமல் கடந்த 10 ஆண்டுகளாக வீணாகவே உள்ளது.

வருங்காலங்களில் ஏற்றுமதியை ரூ.2 ஆயிரம் கோடியில் இருந்து ரூ.4 ஆயிரம் கோடியாக உயர்த்த வேண்டும். புதுச்சேரியில் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை. தொழில் தொடங்குவதற்கான அனுமதியை அதிகாரிகள் எளிய முறையில் வழங்க வேண்டும். அதிகாரிகள் முதலீட்டாளர்களை அலைக்கழிக்கக் கூடாது. தொழிற்சாலைகளுக்கு மின் இணைப்பு கொடுப்பதை எளிதாக்க வேண்டும். அதிகாரிகள் தொழிற்சாலைகளைத் தொடங்க எளிய முறையில் அனுமதியை வழங்க வேண்டும்" என வலியுறுத்தினார்.

அதையடுத்துப் பேசிய துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், '' வாணிஜ்ய உத்சவ் என்ற நிகழ்ச்சியின் பெயரை வணிகத் திருவிழா எனத் தமிழில் அனைவருக்கும் புரியும்படி வைத்திருந்தால் சிறப்பாக இருந்திருக்க வேண்டும். இரண்டு பெயரிலும் குறிப்பிட்டிருக்கலாம். பொதுமக்களுக்குப் புரியும் வகையில், அதிகாரிகள் வருங்காலங்களில் இவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும்.

கரோனா காலத்திலும் ஏற்றுமதி சிறப்பாக நடைபெற்ற மாநிலம் புதுச்சேரி. புதுச்சேரி முன்பு தொழிற்சாலைகள் நிறைந்திருந்த மாநிலமாகத் திகழ்ந்தது. தற்போது தொழிற்சாலைகள் குறைந்துள்ளது உண்மை. முதல்வர் கூறிய கருத்திற்கு நான் ஒத்துப்போகிறேன். புதுச்சேரியைப் பற்றி கனவு எனக்குண்டு. புதுச்சேரியை மேம்படுத்துவதற்கு அனைத்து உதவிகளையும் பிரதமர் மோடி செய்வதாக உறுதியளித்துள்ளார். மத்திய, மாநில அரசுகள் இணைந்து புதுச்சேரியை வளர்ச்சிப் பாதையில் கொண்டுசெல்லும். பிரதமர், முதல்வர் உள்ளிட்ட எல்லோரும் இணைந்து புதுச்சேரியை மேம்படுத்தப்பட்ட மாநிலமாக மாற்ற நாம் அனைவரும் பாடுபட வேண்டும்" என்று குறிப்பிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x