Published : 21 Sep 2021 01:26 PM
Last Updated : 21 Sep 2021 01:26 PM

சாலை நடைபாதையில் கிரானைட் கற்கள் பதிப்பா?- வரிப் பணத்தை வீணாக்காதீர்: ஓபிஎஸ் வலியுறுத்தல்

சாலை நடைபாதையில் கிரானைட் கற்கள் பதிக்கப்படுவதாகச் செய்திகள் வெளியாவதால், மக்களின் வரிப் பணத்தை வீணாக்க வேண்டாம் என்று ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர்‌ ஓ.பன்னீர்செல்வம்‌ இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

''சாலைகளின்‌ இருமருங்கிலும்‌ இடத்திற்குத் தகுந்தாற்போல்‌ பாதசாரிகளின்‌ அளவிற்குப் பொருத்தமான அகலம்‌ கொண்ட நடைபாதைகள்‌ அமைப்பதும்‌, அந்த நடைபாதைகள்‌ ஆக்கிரமிக்கப்படாமல்‌ பார்த்துக்‌கொள்வதும்‌, அவ்வாறு அமைக்கப்படும்‌ நடைபாதைகள்‌ பாதசாரிகள்‌ நடப்பதற்கு ஏதுவாக இருக்கிறதா என்பதைக் கண்காணிப்பதும்‌ மாநில அரசின்‌ கடமை.

போக்குவரத்து நெரிசலைத்‌ தவிர்க்கும்‌ விதமாகவும்‌, பயண நேரம்‌ மற்றும்‌ வாகன இயக்கச்‌ செலவினைக்‌ குறைக்கும்‌ வண்ணமும்‌, புதிய பாலங்கள்‌ அமைத்தல்‌, வட்டச்‌ சாலைகள்‌ அமைத்தல்‌, புறவழிச்‌ சாலைகள்‌ அமைத்தல்‌ உட்பட பல்வேறு சாலைப்‌ பணிகளைச்‌ செய்யும்‌ அரசு, நடைபாதை அமைக்கும்‌ பணிகளையும்‌ மேற்கொண்டு வருகிறது என்றாலும்‌, அதில்‌ பாதசாரிகளுக்கு சில சிரமங்கள்‌ இருப்பதாகத்‌ தெரிய வருகிறது.

சென்னையில்‌, ஏற்கெனவே நல்ல நிலையில்‌ உள்ள நடைபாதைகளில்‌ இருந்த கருங்கற்கள்‌, சிமெண்ட்‌ கற்கள்‌ பெயர்த்து எடுக்கப்பட்டுக் குப்பையில்‌ வீசப்படுவதாகவும்‌, அதற்கு பதிலாக புதிதாக கிரானைட்‌ கற்கள்‌ பொருத்தப்படுவதாகவும்‌ பத்திரிகைகளில்‌ செய்தி வந்துள்ளது. ஏற்கெனவே இருந்த கருங்கற்கள்‌ மற்றும்‌ சிமெண்ட்‌ கற்களினால்‌ ஆன நடைபாதைகள்,‌ சிறுவர்கள்‌, மூத்த குடிமக்கள்‌, கர்ப்பிணிப்‌ பெண்கள்‌ என அனைத்துத்‌ தரப்பினரும்‌ நடப்பதற்கு ஏதுவாக இருந்ததாகவும்‌, இதுபோன்ற நடைபாதைகள்‌ மழைக்‌ காலங்களிலோ அல்லது தண்ணீர்‌ இருக்கும்‌ இடங்களிலோ சறுக்காமல்‌ பிடிமானத்துடன்‌ இருந்ததாகவும்‌, ஆனால்‌, தற்போது பளபளப்பான கிரானைட்‌ கற்களால்‌ அமைக்கப்படும்‌ நடைபாதைகள்‌ சறுக்கும்‌ தன்மை உடையதாக உள்ளதாகவும்‌, இதன்‌ காரணமாக மூத்த குடிமக்கள்‌, சிறுவர்கள்‌, கர்ப்பிணிப்‌ பெண்கள்‌ ஆகியோர்‌ நிலை தடுமாறும்‌ சூழ்நிலை ஏற்படுவதாகவும்‌, இதற்குப்‌ பயந்து பெரும்பாலான பாதசாரிகள்‌ நடைபாதைகளில்‌ நடக்காமல்‌ சாலையின்‌ ஓரமாக நடப்பதாகவும்‌, கிரானைட் கற்கள்‌ பதித்த நடைபாதை ஆபத்தானதாக உள்ளதாகவும்‌ பாதசாரிகள்‌ தெரிவிப்பதாகத் தகவல்கள்‌ வருகின்றன.

மேலும்‌, ஏற்கெனவே நல்ல நிலையில்‌ இருந்த கருங்கற்கள்‌ மற்றும்‌ சிமெண்ட்‌ கற்களினாலான நடைபாதைகள்‌ பெயர்த்து எடுக்கப்பட்டு குப்பைத்‌ தொட்டியில்‌ வீசப்படுவதாகவும்‌, இதன்‌ காரணமாக மக்களின்‌ வரிப்‌ பணம்‌ வீணடிக்கப்படுவதாகவும்‌ பொதுமக்கள்‌ தெரிவிக்கின்றனர்‌. மொத்தத்தில்‌, இதுபோன்ற நடவடிக்கை, 'அரசுப்‌ பணம்‌ வீண்‌', 'பொதுமக்களுக்கு அச்சம்‌' என்ற இரட்டிப்பு பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது.

'மக்களுக்காக திட்டங்கள்‌, திட்டங்களுக்காக மக்கள்‌ அல்ல' என்ற கோட்பாட்டிற்கேற்ப, மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தக்கூடிய, மக்களின்‌ வரிப்‌பணம்‌ வீணாகக்கூடிய, விபத்துகளையும்‌, அதன்மூலம்‌ உயிரிழப்புகளையும்‌ ஏற்படுத்தக்கூடிய இந்த திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டியது அரசின்‌ கடமை எனப் பொதுமக்கள்‌ கருதுகிறார்கள்‌.

எனவே, முதல்வர், இதில் உடனடியாக கவனம்‌ செலுத்தி, இதன்‌ உண்மை நிலையைக்‌ கண்டறிந்து, பாதசாரிகளின்‌ கருத்துகளையும்‌ கேட்டறிந்து, அரசுப்‌ பணம்‌ வீணடிக்கப்படுவதைத்‌ தடுக்கவும்‌, பாதசாரிகளின்‌ நலன்கள்‌ பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யவும்‌ நடவடிக்கை எடுக்க வேண்டும்‌ என்று கேட்டுக்‌ கொள்கிறேன்''‌.

இவ்வாறு ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x