மாநிலங்களவை திமுக வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல்

கனிமொழி சோமு - கே.ஆர்.என்.ராஜேஸ்குமார்: கோப்புப்படம்
கனிமொழி சோமு - கே.ஆர்.என்.ராஜேஸ்குமார்: கோப்புப்படம்
Updated on
1 min read

மாநிலங்களவை திமுக வேட்பாளர்கள் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.

அதிமுக சார்பாக, மாநிலங்களவை உறுப்பினர்களாக இருந்த அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இதனால், தங்களுடைய எம்.பி. பதவிகளை அவர்கள் ராஜினாமா செய்தனர். இதையடுத்து, அவ்விரு இடங்களும் காலியானதாக, இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்நிலையில், அந்த 2 காலி இடங்களுக்கு அக்.4 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என, இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 9-ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. இவ்விரு காலியிடங்களில், வைத்திலிங்கத்தின் பதவிக் காலம் 2022, ஜூன் மாதம் மற்றும் கே.பி.முனுசாமியின் பதவிக் காலம் 2026, ஏப்ரல் மாதம் முடிவடையும்.

இந்நிலையில், இரு மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தலுக்கு திமுக வேட்பாளர்களாக கனிமொழி சோமு மற்றும் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் ஆகியோர் போட்டியிடுவார்கள் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், கனிமொழி சோமு, கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் இருவரும் இன்று (செப். 21) தலைமைச் செயலகத்தில், சட்டப்பேரவைச் செயலாளரும், தேர்தல் அதிகாரியுமான கி.சீனிவாசனிடம் வேட்புமனுவைத் தாக்கல் செய்தனர். அப்போது, முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் கே.என்.நேரு, எம்.பி.க்கள் திருச்சி சிவா, கனிமொழி, என்.ஆர்.இளங்கோ, உதயநிதி எம்எல்ஏ உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இத்தேர்தலுக்கு வேட்புமனுத் தாக்கல் செப்.15-ம் தேதி தொடங்கியது. வேட்பு மனுத்தாக்கல் செப்.22 (நாளை) வரை நடைபெறுகிறது. செப்.23ஆம் தேதி வேட்புமனு மறுபரிசீலனையும், வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் செப். 27ஆம் தேதி எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை அக்.4 அன்று காலை 9 மணியில் இருந்து மாலை 4 மணி வரை நடைபெறும். மாலை 5 மணிக்குத் தேர்தல் முடிவுகள் வெளியாகும்.

திமுகவுக்கு சட்டப்பேரவையில் போதிய பலம் இருப்பதால், இரு வேட்பாளர்களும் போட்டியின்றித் தேர்வாக வாய்ப்புள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in