ரயில்வே திட்டங்கள்; கடந்த ஆட்சிக் காலத்தில் இருந்த தடைகளை நீக்குக: முதல்வர் ஸ்டாலினுக்கு சு.வெங்கடேசன் எம்.பி. கடிதம்

ரயில்வே திட்டங்கள்; கடந்த ஆட்சிக் காலத்தில் இருந்த தடைகளை நீக்குக: முதல்வர் ஸ்டாலினுக்கு சு.வெங்கடேசன் எம்.பி. கடிதம்
Updated on
1 min read

ரயில்வே திட்டங்கள் நிறைவேற்றப்பட கடந்த ஆட்சிக் காலத்தில் இருந்த தடைகளை நீக்கக் கோரி முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சு.வெங்கடேசன் எம்.பி. கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக கடிதத்தில் சு.வெங்கடேசன் கூறியிருப்பதாவது:

''ரயில்வே துறையின் ஆலோசனைக் குழு உறுப்பினர் என்ற முறையில் தமிழகத்தின் ரயில்வே வளர்ச்சித் திட்டங்களை உரிய காலத்தில் நிறைவேற்றுவதில் உள்ள சிக்கல்களை ஆராய்ந்தபோது தங்களின் கவனத்துக்குக் கொண்டுவர வேண்டிய முக்கியப் பிரச்சினையை ரயில்வே அதிகாரிகள் என்னிடம் சுட்டிக்காட்டினார்கள். அதனை உங்களின் பார்வைக்குக் கொண்டுவருகிறேன்.

மதுரை -தூத்துக்குடி; மணியாச்சி- நாகர்கோவில் ஆகிய இரு முக்கிய ரயில் வளர்ச்சித் திட்டங்களான இரட்டைப் பாதை திட்டங்களும், மதுரை- போடிநாயக்கனூர் மற்றும் திருத்துறைப்பூண்டி- அகஸ்தியம்பள்ளி அகலப்பாதை திட்டங்களும் ; பேரளம்- காரைக்கால் புதிய பாதை திட்டமும் மார்ச் 2022க்குள் முடிய வேண்டியவையாகும்.

ஆனால், மாவட்ட ஆட்சியர்கள் இந்தத் திட்டங்களில் மண் அள்ளுவதற்கு அனுமதி வழங்காததால் தாமதமாகிறது. சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையின் உத்தரவுப்படி மண் அள்ளுவதற்கு மாவட்ட ஆட்சியரிடம் முன் அனுமதி பெற வேண்டும். மாவட்ட ஆட்சியர் அந்த மண்ணை ஒரு சோதனைக் கூடத்தில் கொடுத்து அந்த மண்ணில் தாது பொருள்கள் இல்லை என்று உறுதிப்படுத்திக்கொண்டு அனுமதி வழங்க வேண்டும் என்பது உயர் நீதிமன்ற உத்தரவு.

ஆனால், முந்தைய அதிமுக அரசு இதற்கான சோதனைக் கூடங்களை நிர்ணயிக்காததாலும், உயர் நீதிமன்றத்தின் மற்ற கருத்துகள் குறித்தும் ஒரு உத்தரவு வழங்காததாலும் மாவட்ட ஆட்சியர்கள் அனுமதி வழங்கவில்லை.

கடந்த ஆட்சிக் காலத்தில் உருவான இந்தத் தடைகளால் முக்கியமான அடித்தளக் கட்டுமான ரயில் வளர்ச்சிப் பணிகள் முடிவடைவது தாமதமாகிறது. எனவே தாங்கள் தலையிட்டு, தமிழக அரசு பரிசோதனைக் கூடங்களை நிர்ணயம் செய்யவும், மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுமதி வழங்குவது குறித்த வரையறைகளை உத்தரவிடவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்''.

இவ்வாறு சு.வெங்கடேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in