Published : 21 Sep 2021 03:18 AM
Last Updated : 21 Sep 2021 03:18 AM

ஆசிரியர் பணிக்கான வயது வரம்பை தளர்த்தக் கோரி டிபிஐ வளாகத்தில் பி.எட். பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்: முதல்வருக்கு உருக்கமான வேண்டுகோள்

ஆசிரியர் பணிக்கான வயது வரம்பை தளர்த்தக் கோரி சென்னை டிபிஐ வளாகத்தில் 40 வயதைக் கடந்த பிஎட் பட்டதாரிகள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ‘நாங்கள் அரசிடம் வேலை கேட்கவில்லை. வேலைக்காக நடத்தப்படும் போட்டித் தேர்வு எழுதுவதற்கு வாய்ப்பு தாருங்கள்’ என்று முதல்வர் ஸ்டாலினுக்கு உருக்கத்துடன் வேண்டுகோள் விடுத்தனர்.

கடந்த ஆண்டு வரை ஆசிரியர்பணிக்கான வயது வரம்பில் கட்டுப்பாடு கிடையாது. இந்நிலையில், ஆசிரியர் பணிக்கு வயது வரம்பு கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டு கடந்த 30.1.2020 அன்று அரசாணைபிறப்பிக்கப்பட்டது. அதன்படி, பொதுப்பிரிவினருக்கு வயதுவரம்பு 40 ஆகவும், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 45 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த அரசாணையைப் பின்பற்றி ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 9-ம் தேதி அன்று முதுகலை பட்டதாரி தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டது.

இதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு கடந்த 18-ம் தேதிதொடங்கி நடைபெற்று வருகிறது.40 வயது நிரம்பிய பொதுப்பிரிவினரும், 45 வயதைத் தாண்டிய இடஒதுக்கீட்டுப் பிரிவினரும் வயது வரம்பு கட்டுப்பாடு காரணமாக இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க இயலவில்லை. இந்நிலையில், ஆசிரியர் பணிக்கான வயது வரம்பை தளர்த்தக் கோரி பிஎட் பட்டதாரிகள் 100 பேர் ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகம், பள்ளிக்கல்வி ஆணையர் அலுவலகம் அமைந்துள்ள சென்னை நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து பள்ளிக்கல்வி ஆணையர் அலுவலகம் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியஅலுவலகத்தில் தங்கள் கோரிக்கைமனுக்களை சமர்ப்பித்தனர். பின்னர், இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர்கள் கூறியதாவது:

40 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டுமே முதுகலை ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும் என்றுஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 40 வயது தாண்டியவர்கள் 2 லட்சத்துக்கும் மேல் உள்ளனர். இந்தத் தேர்வை எதிர்பார்த்து பல மாதங்களாக படித்துவருகிறோம். வயது வரம்பு அறிவிக்கப்பட்டிருப்பது மிகுந்த ஏமாற்றமாக இருக்கிறது.

கடந்த சட்டப்பேரவை தேர்தலின்போது புதுக்கோட்டையில் நடந்த பிரச்சாரத்தில், திமுக ஆட்சிக்கு வந்ததும் ஆசிரியர் பணிக்கான வயது வரம்பு நீக்கப்படும் என்றுதிமுக தலைவர் ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார். அவரது வாக்குறுதியை நம்பி நாங்கள் தேர்வுக்கு படித்து வந்தோம். தற்போது திமுக ஆட்சிக்கு வந்துள்ளது.

ஆனால், கடந்த ஆட்சியில் பிறப்பிக்கப்பட்ட அரசாணையே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தமிழக முதல்வரின் தேர்தல் பிரச்சார உறுதிமொழியை நிறைவேற்றும் பொருட்டு வயது வரம்பு தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்துசெய்ய உத்தரவிட வேண்டும்.

ஆசிரியர் பணிக்கான வயது வரம்பை தளர்த்துவதால் அரசுக்குஎந்த வகையிலும் நிதி இழப்பு ஏற்படப் போவதில்லை. எங்களுக்கு அரசு வேலை தாருங்கள் என்றுகேட்கவில்லை. அரசு வேலைக்குநடத்தப்படும் தேர்வை எழுத வாய்ப்பு தாருங்கள் என்றுதான் கேட்கிறோம். எங்கள் கோரிக்கையை முதல்வர் நிச்சயம் நிறைவேற்றுவார் என்று நம்புகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x