Published : 21 Sep 2021 03:19 AM
Last Updated : 21 Sep 2021 03:19 AM

முதல்வர் அறிவுறுத்தலின்பேரில் மாநகராட்சிகளுக்கு விரைவில் தேர்தல் நடத்தும் வகையில் மறுவரையறை பணிகள் தீவிரம்: நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தகவல்

சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு. உடன், ஆட்சியர் கார்மேகம் உள்ளிட்டோர். படம்: எஸ்.குரு பிரசாத்.

சேலம்

மாநகராட்சிகளுக்கு விரைவில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தியுள்ளதால், வார்டு மறுவரையறை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

சேலத்தில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நகராட்சிப் பகுதிகளில் உள்ள பாசனமற்ற ஏரிகளை தூர்வாரி, மழை நீர் வடிகால் மூலமாக ஏரிகளை நிரப்பி, நிலத்தடி நீரினைபெருக்குவதற்கு சட்டப்பேரவையில் ஏற்கெனவே அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதற்கான பணி நடந்துவருகிறது. தமிழகம் முழுவதும் இன்று முதல் 10 நாட்களுக்கு தூர் வாரும் பணி நடைபெறவுள்ளது.

பாதாள சாக்கடை திட்டத்துக்குவிரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும்போது மண் பரிசோதனை செய்து திட்டம் தயாரிக்கிறோம். சேலம் மாநகராட்சியில் சீர்மிகு நகரம் திட்டத்தின்கீழ் மோசடி நடைபெற்றதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

சென்னை உட்பட பல பகுதிகளில் கழிவு நீரினை மறுசுழற்சி செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்தவரையில் மாம்பலம் வாய்க்காலின் இருபுறமும் கழிவுநீர் கலக்கிறது. தற்போது புதிய திட்டத்தின் மூலம் இருபுறமும் குழாய் பதித்து கழிவுநீரினை மறு சுழற்சி செய்யும் மையத்துக்கு கொண்டு செல்லப்பட உள்ளது. சென்னையில் 380 இடங்களில் சாக்கடை கலப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. விரைவில் கூவம், அடையாறு பேசின் உள்ளிட்ட இடங்களில் சாக்கடை கழிவுநீர் கலக்காதவாறு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மாநகராட்சி தேர்தலுக்காக வார்டுகளை பிரித்து, வார்டு மறுவரையறை செய்வது தொடர்பாக கடந்த ஆட்சியில் 2018-ம் ஆண்டு ஒரு அரசாணை வெளியிடப்பட்டது. தற்போது 6 மாநகராட்சிகள், 29நகராட்சிகள் புதிதாக தோற்றுவிக்கப்பட்டுள்ளன. இவற்றை இணைக்கும்போது, சில வேறுபாடுகள் வருகின்றன. அது தொடர்பான பணிகளை துறை அலுவலர்கள் சரிசெய்யத் தொடங்கிவிட்டனர்.

ஒரே சீராக வார்டுகளை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதனை அறிவிப்பதற்கு 20 நாட்கள் ஆகும். அறிவிப்பு வெளியான பிறகு 100 நாட்கள் அவகாசம் தரவேண்டும். ஆட்சேபனைகள் தெரிவிக்கும்பட்சத்தில் அதனை சரிசெய்ய மேலும் 30 நாட்கள் தேவைப்படும். மாநகராட்சிகளுக்கு உறுதியாக விரைவில் தேர்தல் நடத்த வேண்டும் என்று முதல்வர் கூறியுள்ளார். அதற்கான பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். எப்போது தேர்தல் என்பதை தேர்தல் ஆணையம் அறிவிக்கும்.

மக்கள் தொகையின் அடிப்படையில் மாநகராட்சி வார்டுகளை பிரிக்கவுள்ளோம். 3 லட்சம் வாக்காளர்கள் இருந்தால் 50 முதல் 58 வார்டுகளும், 3 முதல் 5 லட்சம் வரை வாக்காளர்கள் இருந்தால் 80 வார்டுகளும், 5 லட்சத்துக்கு மேல் வாக்காளர்கள் இருந்தால் 100 வார்டுகளாகவும் பிரிக்கப்படும். சென்னையில் 200 வார்டுகள் உள்ளன என்றார்.

சேலம் ஆட்சியர் கார்மேகம், மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ், எம்பி பார்த்திபன், எம்எல்ஏ ராஜேந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x