Published : 21 Sep 2021 03:19 AM
Last Updated : 21 Sep 2021 03:19 AM

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அதிமுக ஊராட்சி ஒன்றியத் தலைவர் ராஜினாமா: 6 வார்டு உறுப்பினர்கள் உட்பட 9 பேர் கட்சியில் இருந்து நீக்கம்

தனது ராஜினாமா கடிதத்தை அளிக்க தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றியத் தலைவர் ஜான்சி வாஞ்சிநாதன். உடன், அதிமுக மாவட்டச் செயலாளர் சையதுகான்.

உத்தமபாளையம்

தேனி மாவட்டம், உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றியத் தலைவர் (அதிமுக) தனது பதவியை ராஜினாமா செய்தார்.

உத்தமபாளையம் ஊராட்சிஒன்றியத்தில் 2019-ல் உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. இதில் 7 இடங்களில் அதிமுகவும், 2 இடங்களில் திமுகவும், ஒரு இடத்தில் அமமுகவும் வென்றன. இதை தொடர்ந்து ஒன்றியத் தலைவராக அதிமுகவைச் சேர்ந்த ஜான்சி
வாஞ்சிநாதனும், துணைத் தலைவராக மூக்கம்மாள் என்பவரும் தேர்வு செய்யப்பட்டனர்.

நம்பிக்கையில்லா தீர்மானம்

இந்நிலையில் அதிமுக உறுப்பினர்கள், திமுக உறுப்பினர்களுடன் சேர்ந்து தலைவர் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவர முடிவு செய்தனர். இதற்கான கூட்டம், கோட்டாட்சியர் கவுசல்யா தலைமையில் நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில் ஜான்சி வாஞ்சிநாதன் தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.

இது குறித்த கடிதத்தை ஆட்சியர் முரளிதரனிடம் நேற்று வழங்கினார். உடன் அதிமுக மாவட்ட செயலாளர் சையதுகான் உள்ளிட்டோர் இருந்தனர்.

இதற்கிடையே உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்த 6 வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட 9 பேர் அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அதிமுக நடவடிக்கை

இதுதொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு:

அதிமுகவைச் சேர்ந்த தேனி மாவட்டம் உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்து கட்சியின் கொள்கை, குறிக்கோள், கோட்பாடுகளுக்கு முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்டுப்பாட்டை மீறி கட்சிக்குக் களங்கமும் அவப்பெயரும் உண்டாக்கும் வகையில் செயல்பட்ட காரணத்தினாலும் ஊராட்சி ஒன்றியக் குழுவின் 1, 3 முதல் 7 வார்டுகளின் உறுப்பினர்களான ஜெகதீஸ்வரன், அந்தோனி, மூக்கம்மாள், அறிவழகன், செல்வி, கலைச்செல்வி ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள். அதேபோல, அவர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்ட சந்திர சேகரன், பிரசாத், கெப்புராஜ் ஆகியோரும் நீக்கம் செய்யப்படுகிறார்கள். கட்சியினர் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x