திருச்சுழி அருகே புரசலூரில் கண்டெடுக்கப்பட்ட சதிக்கல்.
திருச்சுழி அருகே புரசலூரில் கண்டெடுக்கப்பட்ட சதிக்கல்.

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே 3,200 ஆண்டுகளுக்கு முந்தைய தாழி, கீறல் குறியீடுகள் கண்டெடுப்பு

Published on

சிவகங்கை மாவட்டம், இளையான் குடி அருகே முனைவென்றியில் 3,200 ஆண்டுகளுக்கு முந்தைய மூடியுடன் கூடிய முதுமக்கள் தாழி கள், கீறல் குறியீடுகள் கண்டெ டுக்கப்பட்டன. இப்பகுதியை கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி தமிழ் உதவிப் பேராசிரியரும், தொல்லியல் ஆர்வலருமான முனைவர் ந.ராஜேந்திரன் கள ஆய்வு செய்தார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: முனைவென்றி என்பது கொடுமணலுக்கு இணையான ஊர். இங்குள்ள வயல்வெளி, கொழஞ்சித் திடல், ஆவடியாத்தாள் கண்மாய் பகுதிகளில் 100 ஏக்கரில் பெருங்கற்கால தொல்சான்றுகள் பரவிக் கிடக்கின்றன.

இங்கு மூடியுடன் கூடிய முதுமக்கள் தாழிகள், கருப்பு, சிவப்புநிறப் பானை ஓடுகள், கீறல் குறியீடுகள், செங்கல் வட்டு சில்கள்,
சிறிய கலயங்கள், கற் கருவிகள், மனித எலும்புகள் காணப்படுகின்றன. இந்த தொல்பொருட்களை ஆய்வு செய்ததில், அவை 3,200 ஆண்டுகளுக்கு முந்தையதாக உள்ளது. ஆதிச்சநல்லூர், அழகன்குளம், கொடுமணல், பொருந்தல், கீழடி, சிவகளை அகழாய்வுகளில் கிடைத்த தொல்பொருட்கள் பல இங்கும் காணப்படுகின்றன.

இப்பகுதியை தொல்லியல்துறையினர் முழுமையாக ஆய்வுசெய்தால் ஏராளமான தொல்பொருட்கள் கிடைக்கும். இதன்
மூலம் தமிழனின் பெருமையை உலகறியச் செய்யலாம். இவ்வாறு அவர் கூறினார்.

400 ஆண்டு பழமையான சதிக்கல்

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே உள்ள புரசலூரில் பள்ளி சுற்றுச்சுவர் கட்ட பள்ளம்தோண்டியபோது சுமார் 400 ஆண்டுகள் பழமையான சதிக்கல் கண்டெடுக்கப்பட்டது.

இதுகுறித்து அவ்வூரைச் சேர்ந்த வரலாற்றுத்துறை உதவிபேராசிரியர் செ.ரமேஷ், ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவன
தலைவர் வே.ராஜகுருவுக்குத் தகவல் தெரிவித்தார்.

இச்சிற்பத்தை ஆய்வுசெய்த தொல்லியல் ஆய்வாளர் வே.ராஜகுரு கூறியதாவது:

இந்தச் சிற்பம் உடன் கட்டைஏறி உயிரை மாய்த்துக் கொண்டபெண்ணுக்கு வைத்த சதிக்கல்ஆகும். பழங்காலத்தில் போரிலோ, வேறு காரணத்தாலோ கணவர் உயிரிழந்தால், அவருடனோ அல்லது தனியாகவோ உடன்கட்டை ஏறி உயிர்துறந்த பெண்களுக்கு நினைவுச் சின்னம் அமைத்து வழிபடும் வழக்கம் இருந்துள்ளது.

இவற்றை மாலையீடு, மாலையடி, தீப்பாஞ்சம்மன், மாலைக்காரி, சீலைக்காரி என்றும் அழைக்கிறார்கள். சதி, மாலை ஆகிய
சொற்களுக்கு பெண் என்றும்பொருள் உண்டு. இந்நிலையில் புரசலூரில் கண்டெடுக்கப்பட்ட சதிக்கல் 2.5 அடி உயரமும், 1.5 அடி அகலமும் கொண்டது. இச்சதிக்கல் அமைப்பைக் கொண்டு பார்க்கும்போது, இது கி.பி.17-ம்நூற்றாண்டைச் சேர்ந்தது எனலாம். இவ்வாறு அவர் கூறினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in