Published : 27 Feb 2016 09:32 PM
Last Updated : 27 Feb 2016 09:32 PM

அதிமுக, திமுகவை ஒழியுங்கள் போதும்: வண்டலூர் மாநாட்டில் அன்புமணி ஆவேசம்

தமிழ்நாட்டுக்கு திராவிடக் கட்சிகளால் எந்த நன்மையும் இல்லை. அதிமுக, திமுகவை ஒழியுங்கள் போதும் என்று பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி ஆவேசமாகக் கூறியுள்ளார்.

சென்னை வண்டலூரில் இன்று நடைபெற்ற பாமக மாநில அரசியல் மாநாட்டில், '' ‘அன்புமணி ஆகிய நான்’ என்று பாமக சார்பில் வெளியிடப்பட்ட விளம்பரத்தில் பேசிய அதே வசனத்தோடு மாநாட்டில் அன்புமணி தனது பேச்சை தொடங்கினார்.

போடியத்தை பயன்படுத்தாத அன்புமணி இயர் ஜாக் மைக் மூலம் மேடையில் நடந்து கொண்டே பேசியதாவது:

''இது வரலாறு படைக்கின்ற மாநாடு. இதுவரை தமிழ்நாட்டில் எந்த கட்சியும் இவ்வளவு கூட்டத்தை கூட்டியது கிடையாது. இதுதான் முதல் முறை.

இங்கே வந்த இளைஞர்கள் அவர்களாகவே வந்தவர்கள். பாசத்தால், நட்பால், அன்பால் நம்பிக்கையோடு அவர்களாகவே வந்த கூட்டம் இது. மாற்றத்திற்கான கூட்டம் இது. முன்னேற்றத்துக்கான கூட்டம் இது.

நானும் கஷ்டப்பட்டுப் பார்க்கிறேன். கூட்டத்தில் யாருமே வெள்ளை முடியுடன்இல்லை. மேடையில் சிலர் இருக்கிறார்கள். அதிக இளைஞர்கள் உள்ள ஒரே கட்சி பாமகதான். மற்ற கட்சிகளுக்கு சவால் விடுகிறேன். இவ்வளவு கூட்டத்தை கூட்டுங்கள் பார்க்கலாம்.

மற்ற கட்சிகள் முடிந்த கட்சிகள். முடிந்துவிட்ட கட்சிகள். பாமக தான் வளர்ந்த கட்சி. தமிழ்கத்தில் மாற்றம் வேண்டும். புதுமை வேண்டும் என்று நம்பிக்கையோடு கோடிக்கணக்கான மக்கள் இருக்கிறார்கள். திமுக வேண்டாம், அதிமுக வேண்டாம். பாமக வேண்டும். அன்புமணிக்கு வாய்ப்பு கொடுக்கிறோம் என்று முடிவெடுத்து இருக்கிறார்கள்.

பாமக வித்தியாசமான கட்சி. இந்தியாவிலே 14 ஆண்டு காலமாக தேர்தல் வரைவு நிதிநிலை அறிக்கை போட்ட கட்சி பாமக தவிர யாரும் இல்லை. 7 ஆண்டு காலமாக வேளாண் துறை நிதிநிலை அறிக்கை கொடுத்தது, 25 ஆவணங்கள் கொடுத்தது பாமக. ஆட்சி அதிகாரம் இல்லாமல் தமிழகத்துக்கு பல திட்டங்கள் கொடுத்திருக்கிறோம்.

50 ஆண்டுகள் திமுக, அதிமுகவுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறீர்கள். அவர்கள் தோல்வி அடைந்திருக்கிறார்கள். எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள். 50 ஆண்டுகளில் திராவிட கட்சிகள் செய்யாததை அன்புமணி ஆகிய நான் 5 ஆண்டுகளில் செய்து முடிப்பேன்.

அடுத்த 50 ஆண்டு காலத்துக்கும், அடுத்த தலைமுறைக்கும் நான் திட்டமிடுவேன். எங்களால் முடியும். இன்னும் சொல்லப்போனால் எங்களால் மட்டும்தான் முடியும். இதை ஆணவத்தில் பேசவில்லை. நம்பிக்கையில் பேசுகிறேன்.

காந்தி சொன்ன வார்த்தைகளை மறக்க முடியாது. 'முதலில் அவர்கள் உங்களை புறக்கணிப்பார். அடுத்து உங்களை ஏளனம் செய்வார். அடுத்து உங்களை கடுமையாக எதிர்ப்பார். இறுதியில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள்' என்று காந்தி சொன்னதை மறக்க முடியாது.

ஓர் ஆண்டுக்கு முன்பு பிப்ரவரி 15, 2015ல் சேலத்தில் மாபெரும் கூட்டத்தைக் கூட்டி பாமகவின் முதல்வர் வேட்பாளராக என்னை அறிவித்தீர்கள். அன்று நம்மை புறக்கணித்தார்கள். நம்மை ஏளனம் பேசினார்கள். இவர்களா? இவர் முதலமைச்சரா? இவர்களால் முடியுமா? என்று கிண்டல் செய்தார்கள். கேலி பேசினார்கள். ஆனால், உறுதியோடு 32 மாவட்டங்களுக்கு சென்று அனைத்து மக்களையும் சந்தித்து 8 மண்டல மாநாடுகளை 8 திசைகளிலும் நடத்தி லட்சக்கணக்கான இளைஞர்களை அழைத்து, பெண்கள் மாநாடு நடத்தி தேர்தல் அறிக்கை வெளியிட்டு ஆயிரக்கணக்கான பொதுக்கூட்டங்கள் நடத்தி மாநில மாநாட்டை நடத்துகிறோம்.

நாம் கடந்து வந்த பாதை சாதாராணம் கிடையாது. ராமதாஸ் 34 ஆண்டு கால உழைப்பு. உங்களின் 26 ஆண்டுகால உழைப்பு இது. இப்போது நம்மை எதிர்க்கிறார்கள். அவர்களுக்கு பயம் வந்துவிட்டது. காந்தி சொன்ன கடைசி வார்த்தை இறுதியில் நாம் வெற்றி பெறுவோம். இன்னும் இரண்டு மாதம். இரண்டு மாதத்திலே வெற்றி பெறுவோம்.

ஏன் ஆட்சி மாற்றம்?

இதுவரை தமிழ்நாட்டில் வேறு வழி இல்லை. மாற்றுக்கட்சி இல்லை. ஒரு பக்கம் சாத்தான், மறுபக்கம் ஆழ்கடல் என்று மாறி மாறி வாக்களித்தார்கள். முதல் முறையாக 50 ஆண்டுகாலமாக ஒரு மாற்றம் இருக்கிறது.

இப்போது மக்களுக்கு ஒரு வாய்ப்பு இருக்கிறது. ஒரு பக்கம் சாத்தான், மற்றொரு பக்கம் ஆழ்கடல். இருவருக்கும் மத்தியில் டாக்டர் என்ற வாய்ப்பு இருக்கிறது.

எனக்கு பதவி ஆசை கிடையாது. 35 வயதில் பதவிகளைப் பார்த்துவிட்டேன். தமிழகம் முன்னேற வேண்டும். இது என் கனவு. இந்தியாவில் பெரிய மாநிலங்களில் தமிழகம் 21வது இடத்தில் இருக்கிறது. வெட்கக்கேடு! மக்கள் துடித்துக்கொண்டிருக்கிறார்கள்.

தமிழகத்தில் பாமகவால் நிச்சயம் மாற்றம் வரும். தமிழக மக்களே நீங்கள் நல்ல முடிவெடுங்கள். திமுக போதும், அதிமுக போதும்.

தமிழகத்தில் களத்தில் தைரியமாக வீரநடை போடும் கட்சி பாமக மட்டும்தான். நாங்கள் யாரையும் எதிர்பார்க்கவில்லை. எங்களுக்கு யாரும் தேவையில்லை. இந்த தேர்தலைப் பொறுத்தவரையில் திமுக, அதிமுக தவிர யாரும் கூட்டணிக்கு வரலாம் என்று ராமதாஸ் சொல்லியிருக்கிறார். வந்தால் மகிழ்ச்சி. வரவில்லையென்றால் மிக்க மகிழ்ச்சி.

காரணம்... நம்பிக்கை... உங்களை நம்பி இந்த முடிவெடுத்து இருக்கிறோம். மாற்றம் வேண்டும், மதுவிலக்கு வேண்டும் என்று கேட்கும் பெண்களை நம்பி இந்த முடிவெடுத்திருக்கிறோம்.

66 வயதுள்ள திமுக தனியாக போட்டியிட பயந்துகொண்டிருக்கிறது. 44 வயதுள்ள அதிமுக தனியாக போட்டியிட பயந்துகொண்டிருக்கிறது . கருணாநிதி யாராவது வருவார்களா என்று காத்துக்கொண்டிருக்கிறார். ஜெயலலிதா எதிரிகளே இல்லை என்று சொன்னார். எல்லோரும் அவருக்கு எதிரியாக இக்கிறார்கள். இவர்களுக்கு மத்தியில் மக்களை நம்பி களத்தில் இருக்கிறோம். எங்களுக்கு நம்பிக்கையும், தைரியமும் இருக்கிறது

இந்த மாநாடு தமிழ்நாட்டில் இதுவரை எந்த அரசியல் கட்சியும் கூட்டாத கூட்டம் இது. இது கூட்டிய கூட்டம் இல்லை. வந்த கூட்டம்.

தமிழகத்தில் 1 கோடி 97 லட்சம் குடும்பங்கள் இருக்கின்றன. இவர்கள் எல்லோரும் பாதிக்கப்பட்ட விஷயம் ஒன்று இருக்கிறது. ஒரு தீங்கால் அத்தனை குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை தமிழத்தின் முதல் பிரச்சினையாகக் கருதுகிறேன்.

இன்று தமிழகத்தின் முதன்மைப் பிரச்சினை மது பிரச்சினை. 1 கோடியே 97 லட்சம் குடும்பங்களில் பாதிக்கப்படாத குடும்பமே கிடையாது. தாத்தா, அப்பா, பிள்ளை, பேரன், மாமன், மச்சான் என்று ஒருவராவது பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதிக மதுவிற்பனை நடப்பது, அதிக விதவைகள் இருப்பது, அதிக சாலை விபத்துகள் நிகழ்வது, அதிக தற்கொலைகள் நடப்பது தமிழகத்தில்தான்.

உலகில் எந்த அரசாங்கமும் மதுவை திணிப்பதில்லை. ஆனால், தமிழகத்தில் அதிமுக மதுவை திணிக்கிறது. தமிழகத்தில் ஆண்டுதோறும் 2 லட்சம் பேர் மதுவால் இறக்கிறார்கள். 4 வயது குழந்தை, பெண்கள், மாணவர்கள் குடிக்கத் தொடங்கிவிட்டார்கள். இதே நிலை நீடித்தால் அடுத்த தலைமுறை இல்லாமல் போய்விடும்.

34 ஆண்டுகளாக ராமதாஸ் மதுவை எதிர்த்து போராடுகிறார். 26 ஆண்டுகளாக பாமக போராடுகிறது. இதை அரசியலுக்காக ஓட்டுக்காக செய்யவில்லை. இது எங்கள் கடமை. மருத்துவர் என்பதால் அந்த பாதிப்பு என்ன என்று தெரியும். அதனால்தான் இந்த மது அரக்கனை ஒழிக்க வேண்டும் என்று நினைக்கும் ஒரே கட்சி பாமகதான். இந்த மதுவை கொடுத்த கட்சி திமுக.

திமுகவின் முன்னோடிகள் பெரியாரும், அண்ணாவும் மதுவை எதிர்த்தார்கள். காமராஜர், ராஜாஜி, ஓமாந்தூரார் ஆகியோரும் மதுவை எதிர்த்தார்கள். அண்ணா மதுவை எதிர்த்தார். 'குஷ்டரோகி கையில் கிடைக்கும் வெண்ணெயைப் போன்றது மதுவால் வரும் வருமானம்' என்றார். ஆனால், கருணாநிதியும், ஜெயலலிதாவும் மதுவை திணிக்கிறார்கள்.

இதற்கு என்ன தீர்வு?

* முதல் நாள் முதல் கையெழுத்து பூரண மதுவிலக்கு

* டாஸ்மாக் பணியாளர்களுக்கு மதிப்புமிக்க மாற்றுப்பணி

* விதவைகள் மறுவாழ்வுக்கு சிறந்த திட்டங்கள்

* மது அடிமைகளை மீட்க மது போதை மீட்பு மையம்

* கள்ளச் சாராயத்தை ஒழிக்க கடுமையான நடவடிக்கை

* சாராய ஒழிப்பில் சாமானியனுக்கும் பங்கு

முதல் நாள் முதல் கையெழுத்து பூரண மதுவிலக்கு. இதை யார் யாரோ காப்பி அடிச்சிட்டு இருக்காங்க. இந்த கையெழுத்துக்காக கோடிக்கணக்கான பெண்கள், குடும்பங்கள் காத்துக்கொண்டிருக்கின்றன.

எப்போது மதுவிலக்கு வரும்? என்று இருக்கிறார்கள். இன்னும் இரண்டு மாதங்கள் காத்திருங்கள். நான் முதல் கையெழுத்து போடுவேன்.

மது என்பது சுகாதாரப் பிரச்சினை மட்டும் அல்ல, சமூக, முன்னேற்ற, பொருளாதார, வளர்ச்சிப் பிரச்சினை. அதனால்தான் இந்த மதுவை ஒழிக்க வேண்டும்; அழிக்க வேண்டும்.

மதுவை ஒழித்தால் கள்ளச் சாராயம் பெருகிவிடும் என்று சிலர் சொல்கிறார்கள். தமிழக அமைச்சர்கள் சட்ட மன்றத்தில் கூட சொல்கிறார்கள்.

பாமக ஆட்சியில் பூரண மதுவிலக்கு கையெழுத்து போடுவதோடு மட்டுமல்லாமல், மது அடிமைகளை மீட்க ஒவ்வொரு தாலுகாவிலும் மது போதை மீட்பு மையம் அமைப்போம்.

மதுவால் கணவனை இழந்த விதவைகள் தொழில் செய்ய வழிவகைகள் செய்வோம்.

தமிழகத்தில் மணல் கொள்ளை, கிரானைட் கொள்ளை, மின்சாரம், பால்வளம், கல்வி, சுகாதாரத் துறைகளில் ஊழல் நடக்கிறது. ஆற்றில் ஒரு யூனிட் மணல் எடுக்க 674 ரூ. ஆனால், அதை எடுத்து 7000 ரூபாய்க்கு விற்கிறார்கள். எடுப்பது 5000 யூனிட். கணக்கு சொல்வது ஆயிரம் யூனிட். இதை தடுத்தால் 20,000 கோடி வருமானம் வரும்.

தாதுமணல் கொள்ளை தடுத்தால் 50,000 கோடி வருமானம் வரும். கிரானைட் கொள்ளையை தடுத்தால் 30,000 கோடி வருமானம் வரும். இந்த மூன்றையும் முறையாக தடுத்தால் ஒரு லட்சம் கோடி வருமானம் வரும்.

கள்ளச் சாராயம் பெருகும் என்று சொல்பவர்கள் ஆட்சியை எங்களிடம் விட்டு விடுங்கள். நாங்கள் கள்ளச்சாராய ஒழிப்புக்கு டோல் ஃப்ரீ நம்பர் தருகிறோம். தமிழகத்தில் எந்த கிராமத்தில் கள்ளச் சாரயம் விற்கப்படுகிறதோ அங்கு அந்த எண்ணில் புகார் செய்யலாம். அந்த புகார் செய்பவர் அடையாளத்தை பாதுகாப்போம். புகார் உண்மையாக இருந்தால் புகார் செய்பவருக்கு அரசு பத்தாயிரம் ரூபாய் பரிசு கொடுக்கும்.

புகார் உண்மையானால் கிராம நிர்வாக அதிகாரி, சப் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்படுவார். மாவட்ட எஸ்.பி, டிஎஸ்பி கறுப்பு மார்க் போடுவோம்.

டாஸ்மாக்கில் 1000 பட்டதாரிகள் பணியாளர்களாக உள்ளனர். 82 பேர் பொறியியல் படித்துள்ளனர். தமிழகத்தில் 6800 டாஸ்மாக் கடைகள் உள்ளன. டாஸ்மாக் பணியாளார்களுக்கு மாற்று வேலை கிடைப்போம்.

கேரளாவில் 400 கடைகள் இருக்கிறது.கேரளாவில் பூரண மதுவிலக்கு வரும். நிதீஷ்குமார் பீகாரில் மதுவை ஒழித்து வருகிறார். மோடி குஜராத் முதல்வராக இருந்த போது மதுவை ஒழித்திருக்கிறார்.

தமிழகத்தில் 12 மது ஆலைகள் உள்ளன. இதில் திமுகவுக்கு 6 மது ஆலைகள் சொந்தம். அதிமுகவுக்கு 3 மது ஆலைகள் சொந்தம். காங்கிரஸ் கட்சிக்கு 2 மது ஆலைகள் சொந்தம். மது ஆலைகள் மூலம் திமுகவுக்கு ஆண்டுதோறும் ரூ.16,000 கோடி திமுகவிற்கு கிடைக்கிறது. மதுவை ஒழிப்பதாகவும், பூரண மதுவிலக்கில் கையெழுத்து போடுவதாகவும் என்னை காப்பி அடித்து ஸ்டாலின் சொல்கிறார். மக்கள் மேல் அக்கறை இருந்தால் 6 மது ஆலைகளை மூட முடியுமா? காரணம் அது பேச்சுதான்.

கடந்த 20 ஆண்டுகளாக மதுவை ஒழிப்போம் என்று கருணாநிதி சொன்னார். 10 ஆண்டுகள் ஆட்சி செய்தவர் மதுவை ஒழிக்கவில்லை. இப்பொது மட்டும் ஒழிப்பாரா?

என்னைப் பற்றி மக்களுக்கு தெரியும். அன்புமணி பிடிவாதக்காரன். சொன்னா செய்வான். புகையிலையை எதிர்த்து தன்னந்தனியாக போராடியவன் நான். உலக அளவில் புகையிலை லாபி பெரிய மாபியா. அதை எதிர்த்தவன் இந்த அன்புமணி. நான் மதுவை ஒழிப்பேன். என்னால் மட்டும்தான் மதுவை ஒழிக்க முடியும் என்று ஆணவத்தில் சொல்லவில்லை. தைரியத்தோடு நம்பிக்கையோடு சொல்கிறேன்.

ஊழல் , மது புற்றுநோய் போல அரித்துக்கொண்டிருக்கிறது. எங்களுக்கு வாய்ப்பு கொடுங்கள். எங்கள் ஆட்சியில் ஒரு பைசா லஞ்சம் இருக்காது. ஒரு சொட்டு மது இருக்காது. இது எங்களால் முடியும். எங்களால் மட்டும்தான் முடியும்.

எங்கு பார்த்தாலும் பணம். கொள்ளை அடித்துக்கொண்டிக்ருகிறார்கள். இந்திய வரலாற்றில் அதிக கொள்ளை நிர்வாக சீர்கேட்டை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

மாற்றம் என்றால் மதுவையும் ஊழலையும் ஒழிப்போம்.

கடந்த 10 ஆண்டுகளில் நடந்த ஊழலின் மதிப்பு ரூ.70 லட்சம் கோடி. இதற்கு ஒரே தீர்வு. இந்த இரண்டு கட்சிகளும் ஊழல் கட்சிகள் என்பதால் வேண்டாம்.

இந்த ஊழலுக்கு என்ன தீர்வு? பாமக என்ன செய்யும்?

* பாரபட்சமின்றி விசாரணை செய்ய லோக் ஆயுக்தா கொண்டு வரப்படும். லோக் ஆயுக்தா அமைப்புக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கப்படும்.

* ஊழல் செய்தவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும்.

* ஆண்டுதோறும் முதல்வர், அமைச்சர்களின் சொத்து விவரங்கள் வெளியிடப்படும்.

* ஊழலை ஒழிக்க உடனடி நிர்வாக சீர்திருத்தம் செய்யப்படும்.

* தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம், தகவல் ஆணையத்துக்கு நேர்மையான உறுப்பினர்கள் நியமனம் செய்யப்படுவார்கள்.

*ஒவ்வொரு மாவட்டத் தலைநகரத்திலும் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும்.

* அரசு சேவைகளை எளிதாக பெற இணைய சேவை வழிமுறைகள் பின்பற்றப்படும்

50 ஆண்டு நிர்வாகத்தை தூசு தட்டி, சுண்ணாம்பு அடித்து புதிய நிர்வாகத்தை உருவாக்குவேன். டெல்லியில் அமைச்சராக பணியாற்றியபோது எனக்கு கீழ் 40 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியார்றினார்கள். உலகளவில் திட்டங்கள் கொண்டுவந்தேன்.

தமிழகத்தில் நல்ல, நேர்மையான அதிகாரிகள் இருக்கிறார்கள். இவர்கள் இன்று பனிஷ்மென்ட் போஸ்டில் மண்டபத்தில், காவல்துறையில், போலீஸ் அகாடமியில் இருக்கிறார்கள்.

ஆட்சியில் முதல் ஆறு மாதத்தில் லோக் ஆயுக்தா கொண்டுவருவேன். முதல் சட்டமன்ற கூட்டத்தொடரில் சட்டமாக்குவேன். இதனால் முதல்வர் உள்ளிட்ட எந்த அமைச்சரையும் விசாரணை செய்ய முடியும்.

ஒரு டோல் ஃப்ரீ நம்பர் கொடுப்போம். யாராவது லஞ்சம் கேட்டால் புகார் செய்யலாம். முதலமைச்சர் அலுவகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் மேற்பார்வை செய்யபபடும்.

வீட்டை விட்டு வராத முதல்வர், யாரையும் சந்திக்காத முதல்வர் தேவையா?

தமிழகத்தின் நிர்வாகக்கடன் 1 லட்சம் கோடிஇருந்தது. ஐந்தாண்டில் 2 லட்சம் 47 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது. இந்த ஐந்தாண்டில் மட்டும் ஒன்றரை லட்சம் கோடி கடன் அதிகரித்திருக்கிறது. கடன் வாங்கி கொள்ளை அடித்திருக்கிறார்கள். கடன் வாங்குவது நிர்வாகத்திறமையா?

நிர்வாகத் திறமை இல்லாத அரசாங்கம், மக்கள் பணத்தை கொள்ளை அடிக்கிற அரசாங்கம் தேவையா?

மக்கள் கட்டும் அத்தனை வரிப் பணத்துக்கும் திட்டமாக பாமக ஆட்சியில் திருப்பிக் கொடுப்போம்.

சட்டமன்றமா நடக்குது தமிழ்நாட்டில்? அம்மா மன்றம். அம்மாவில் ஆரம்பித்து அம்மாவில் முடிய வேண்டும். இதில் ஜனநாயகம் இல்லை.

பாமக ஆட்சியில் ஜனநாயக மரபுகளை கடைபிடிப்போம். எதிர்கட்சிகளுக்கு 70% பேச வாய்ப்பு கொடுப்போம். சட்ட மன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய பணம் இல்லை என்கிறார் ஜெயலலிதா. ஒரே ஒரு பத்திரிகைக்கு விளம்பரம் செய்ய 300 கோடி ரூபாய் செலவழித்திருக்கிறார்.

பாமக ஆட்சியில் சட்டமன்றத்தில் நல்ல ஆரோக்கியமான விவாதங்கள் நடக்கும். என்னை யாரும் மாண்புமிகு அன்புமணி என்று சொல்லவேண்டாம். அன்புமணி அவர்களே என்றோ டாக்டர் அன்புமணி என்றோ சொல்லலாம். என்னை யாரும் வந்து சந்திக்க வேண்டாம். நான் மக்களை வந்து சந்திப்பேன்.

நான் மிக்சி, கிரைண்டர், ஆட்டுக்குட்டி தரமாட்டேன். கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு கொடுப்பேன். யாரையும் கையேந்த விடமாட்டேன். தன்மானத்தோடு வாழ வைப்பேன்.

தமிழ்நாட்டுக்கு திராவிடக் கட்சிகளால் எந்த நன்மையும் இல்லை. அதிமுக, திமுகவை ஒழியுங்கள் போதும். 60 நாடுகளுக்குச் சென்றிருக்கிறேன். அந்த முன்னேற்றத்தை இங்கு தரவேண்டும் என்ற ஆதங்கமும், வெறியும் எனக்கு இருக்கிறது'' என்று அன்புமணி பேசினார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x