

கோவையில் செயல்படும் விதைச் சான்று மற்றும் அங்ககச் சான்று இயக்ககத்தை சென்னைக்கு மாற்றக்கூடாது என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழ்நாடு அரசின் விதைச் சான்று மற்றும் அங்ககச் சான்று இயக்ககம், கோவையைத் தலைமையிடமாகக் கொண்டு, தடாகம் சாலையில் கடந்த 50 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இத்துறையில் 835-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் உள்ளனர்.
கோவை தலைமை அலுவலகத்தில் மட்டும் 60-க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். அரசு விதைப் பண்ணைகள், விதை உற்பத்தி மையங்கள், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் ஆகிய அரசு, அரசு சார்ந்த விதை உற்பத்தி மையங்களில் இருந்தும், தனியார் விதை உற்பத்தி மையங்களில் இருந்தும் தயாரிக்கப்படும் விதைகள், இங்கு பரிசீலிக்கப்பட்டு, விவசாயிகள் அதை பயன்படுத்தலாமா என சான்றிதழ் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், பரிசீலித்து வழங்கப்பட்ட விதைகள் எதிர்பார்த்த அளவுக்கு உற்பத்தியை தராமல் நஷ்டத்தை ஏற்படுத்தினால், விவசாயிகள் விதைச் சான்று இயக்ககத்தில் முறையிட்டு வருகின்றனர். இந்த இயக்ககத்துக்கு, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில்,‘‘வேளாண்மை, தோட்டக்கலைத் துறைகளின் தலைமை அலுவலகங்கள் சென்னையில் இயங்குவதாலும், விதைச்சான்று, விதை ஆய்வு, அங்ககச்சான்று உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பணிகளை, மாநில அளவில் இதர துறைகளுடன் இணைந்து ஆய்விட வேண்டியுள்ளதாலும், நிர்வாக நலன் கருதி, கோவையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் விதைச் சான்றளிப்பு மற்றும் அங்ககச் சான்றளிப்புத் துறையின் தலைமை அலுவலகம் சென்னைக்கு மாற்றம் செய்யப்படும்’’ என தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் அறிவித்தார். இந்த அறிவிப்பு கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த விவசாயிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த இடமாற்றம் முடிவை கைவிட வேண்டும் என அரசை வலியுறுத்தி வருகின்றனர்.
இதுதொடர்பாக, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கோவை மாவட்ட குழு தலைவர் சு.பழனிசாமி கூறும்போது, ‘‘தமிழ்நாட்டில் அரசு, அரசு சார்ந்த, தனியார் துறைகளின் சார்பில், உரிமம் பெற்ற 841 விதை உற்பத்தி மையங்கள் உள்ளன.
இதில், 70 சதவீதத்துக்கும் அதிகமான மையங்கள் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், திண்டுக்கல், தேனி, மதுரை ஆகிய மாவட்டங்களில் உள்ளன. மொத்த அளவில் ஏறத்தாழ 70 சதவீதம் விதைகள், கோவை விதை சான்றளிப்புத்துறை இயக்குநரகத்துக்கு ஆய்வுக்காக கொண்டு வரப்படுகின்றன. மாநில அளவில் இடுபொருள் மொத்த விற்பனையாளர்கள், உரிமம் பெற்று விதை வணிகம் செய்து வருபவர்களில் பெரும் பகுதியினர், கோவை மண்டலத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பதால், காலதாமதம் இல்லாமல் விவசாயிகளுக்கு விதைகள் வழங்கப்பட்டு வருகின்றன. கோவை சுற்றுப்புறப் பகுதியைச் சேர்ந்தவர்கள் தாமதம் இன்றி விரைவாக சான்றுகளை பெற்றுச் செல்கின்றனர். இதனுடன் இணைந்த ஆராய்ச்சி மையங்களும் கோவையில்தான் இயங்கி வருகின்றன.
இம்மையம் சென்னைக்கு மாற்றப்பட்டால் ஒவ்வொரு முறை யும் சான்று பெற பல கிலோ மீட்டர் தூரம் பயணித்து சென்னைக்கு செல்ல வேண்டியிருக்கும். சான்றளித்த விதைகளில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தாலும், அது தொடர்பாக விவசாயிகள் புகார் அளிக்க சென்னைக்கு தான் செல்ல வேண்டியிருக்கும். அரசின் இந்த முடிவு பொருளாதார ரீதியாக விவசாயிகளுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்துவதோடு, வேளாண் உற்பத்தியையும், ஏற்றுமதியையும் பாதிக்கும்.
எனவே, இடம் மாற்றம் செய்யும் முடிவை அரசு கைவிட வேண்டும்’’ என்றார்.
இதுபற்றி, கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரனிடம் கேட்டபோது, ‘‘விவசாயிகளின் கோரிக்கை தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப் பட்டுள்ளது’’ என்றார்.