

கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போக்குவரத்து வார்டன் அமைப்பின் செயல்பாடுகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.
போக்குவரத்து போலீஸாருக்கு உதவும் வகையில், தமிழ்நாடு போக்குவரத்து வார்டன் அமைப்பு 1977-ல் உருவாக்கப்பட்டது. சென்னையில் 145 போக்குவரத்து வார்டன்கள் உள்ளனர். இவர்கள் வார இறுதி நாட்களில், போக்குவரத்து சாலை சந்திப்புகளில் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், புத்தாண்டு, பண்டிகை, தேர்தல் காலங்களிலும், வழிபாட்டுத் தலங்களில் சிறப்பு நாட்களிலும், முக்கியப் பிரமுகர்கள் வருகை மற்றும் பொதுக் கூட்டங்களின்போதும் வாகன தணிக்கைக்கு உதவுகின்றனர். அதேபோல, போதையில் வாகனம் ஓட்டுபவர்களைக் கண்டறியும் தணிக்கையின்போதும் காவல் துறைக்கு உதவுகின்றனர்.
மேலும், பள்ளி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து பாடம் எடுத்து வருகின்றனர். அது மட்டுமின்றி, தலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் அணிவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றனர். போக்குவரத்து விழிப்புணர்வு குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகள், துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் போன்ற விழிப்புணர்வுப் பணிகளிலும் ஈடுபடுகின்றனர்.
கரோனா பரவல் அச்சம் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக போக்குவரத்து வார்டன்களின் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அறிவுறுத்தலின்படி, போக்குவரத்து வார்டன் அமைப்பின் செயல்பாடுகள் மீண்டும் தொடங்கியுள்ளது.
முதல்கட்டமாக, சென்னை சென்ட்ரல், உழைப்பாளர் சிலை, காந்தி சிலை, ஸ்பென்சர் சந்திப்பு, கோயம்பேடு பேருந்து நிலையம், நந்தனம் சந்திப்பு, மேட்லி சந்திப்பு, அண்ணாந கர் ரவுண்டானா மற்றும் மெரினா, எலியட் கடற்கரைப் பகுதிகளில் போக்குவரத்து வார்டந்கள் மீண்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பள்ளிகள் முழுவதுமாக திறக்கப்பட்ட பிறகு, பள்ளி மாணவர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த பயிற்சி வகுப்புகள் நடத்த உள்ளதாக போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.