Published : 21 Sep 2021 03:19 AM
Last Updated : 21 Sep 2021 03:19 AM

சென்னை பாலவாக்கத்தில் உள்ள விஸ்ராந்தி முதியோர் இல்ல நிறுவனர் சிலை திறப்பு: சாவித்திரி வைத்திக்கு முதியோர் நல மருத்துவர் வ.செ.நடராஜன் புகழாரம்

சென்னை பாலவாக்கத்தில் உள்ள `விஸ்ராந்தி' முதியோர் இல்லத்தில் சாவித்திரி வைத்தி சிலையைத் திறந்துவைத்தார் முதியோர் நல மருத்துவர் வ.செ.நடராசன்.

சென்னை

சென்னை பாலவாக்கத்தில் உள்ள விஸ்ராந்தி முதியோர் இல்லத்தில், நிறுவனர் சாவித்திரி வைத்தி சிலையை முதியோர் நல மருத்துவர் வ.செ.நடராஜன் திறந்துவைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் மருத்துவர் வ.செ.நடராஜன் பேசியதாவது: சென்னை அரசு பொது மருத்துவமனையில் கடந்த 1978-ல் முதியோர் நலப் பிரிவு தொடங்கப்பட்டபோது, சாவித்திரி வைத்தி எனக்கு அறிமுகமானார்.

தமிழகத்தின் முதலாவது முதியோர் இல்லமான விஸ்ராந்தி தற்போது 42 ஆண்டுகளைக் கடந்து, நூற்றுக்கணக்கான முதியோருடன் பிரம்மாண்டமான கூட்டுக் குடும்பமாக செயல்பட்டு வருகிறது.

விஸ்ராந்தி தொடங்கப்பட்டபோது, சாவித்திரி வைத்தி தினமும் காலையில் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, முதியோர் நலப் பிரச்சினைகளுக்கு ஆலோசனை பெறுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். நானும் பலமுறை மருத்துவக் குழுவுடன் விஸ்ராந்திக்கு சென்று, மருத்துவ முகாம்களை நடத்தியுள்ளேன்.

முதியோர் இல்லத்தில் வாழ்ந்து, மறைந்த ஒரு தாயின் இறுதிச் சடங்குக்கு பிள்ளைகள் வரமறுத்த சந்தர்ப்பத்தில், சாவித்திரி வைத்தியே இறுதிச் சடங்கை நடத்திவைத்தார். இது அந்த சமயத்தில் பெரிய புரட்சியாகும்.

உடல்நலம் பாதிக்கப்பட்ட சாவித்திரி வைத்தி கோமா நிலைக்குச் சென்று, 7 ஆண்டுகள் கழித்து தனது 90-வது வயதில் காலமானார். ஆதரவற்ற முதியோருக்கு தாயாக இருந்து, தனது வாழ்வை முதியோருக்காக அர்ப்பணித்த அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

டாக்டர் வி.எஸ்.நடராஜன் முதியோர் நல அறக்கட்டளை சார்பில், விஸ்ராந்தி முதியோர் இல்லத்துக்கு அவர் நூல்களை அன்பளிப்பாக வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், சாவித்திரி வைத்தி சிலை செய்வதற்குரூ.10 லட்சம் நன்கொடை வழங்கிய, அமெரிக்காவைச் சேர்ந்த கிருஷ்ண கோபால் கவுரவிக்கப்பட்டார்.

விஸ்ராந்தி அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் குமுதா சீனிவாசன் மற்றும் அறக்கட்டளை உறுப்பினர்கள் இதில் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x