

தமிழகத்தில் புதிதாக உருவாக உள்ள தாம்பரம், ஆவடி காவல் ஆணையர்கள் பதவிக்கு ஐபிஎஸ் அதிகாரிகள் மத்தியில் கடும் போட்டி நிலவுகிறது.
தமிழகத்தில் குற்றச் செயல்களை முற்றிலும் கட்டுக்குள் கொண்டுவர பல்வேறு தொடர் நடவடிக்கைகளை டிஜிபி சைலேந்திரபாபு மேற்கொண்டுள்ளார். பாதிப்புக்கு உள்ளானவர்கள் புகார் அளிப்பதை எளிமைப்படுத்தவும் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
சென்னையை பொறுத்தவரை 12 காவல் மாவட்டங்கள் உள்ளன. திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களை சேர்ந்த சில பகுதிகளும் சென்னை காவல் ஆணையரின் கட்டுப்பாட்டில் உள்ளன.
இதனால், சட்டம் ஒழுங்கு நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்வதிலும், சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டப் பகுதிகளை சேர்ந்தவர்கள் காவல் ஆணையர் அலுவலகத்துக்கு நேரில் வந்து புகார் தெரிவிப்பதிலும் சிரமம், கால விரயம் ஏற்படுகிறது.
இந்நிலையில், தாம்பரம், ஆவடியை தலைமையிடமாகக் கொண்டு தனித்தனி காவல் ஆணையரகங்கள் அமைக்கப்படும் என்று, நடந்து முடிந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
இதையடுத்து, புதிய காவல் ஆணையர் அலுவலகங்கள் தொடங்குவதற்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கிவிட்டன. விரைவில் தாம்பரம், ஆவடி காவல் எல்லைகள் வரையறுக்கப்பட்டு புதிய காவல் ஆணையர்கள் நியமிக்கப்படுவார்கள். புதிய காவல் ஆணையர்கள் தங்களுக்கு தேவையான அனைத்து வசதிகள், கட்டமைப்புகளை அரசிடம் பெற்றுக் கொள்வார்கள் என்று காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதன்படி, சென்னை காவல் ஆணையரின் கட்டுப்பாட்டில் தற்போது உள்ள பரங்கிமலை, மீனம்பாக்கம், மடிப்பாக்கம், பல்லாவரம், தாம்பரம், சேலையூர் உள்ளிட்ட காவல் சரகங்கள் புதிதாக உருவாக்கப்பட உள்ள தாம்பரம் காவல் ஆணையரின் கட்டுப்பாட்டில் செல்ல வாய்ப்பு உள்ளது.
இதேபோல, ஆவடி, பட்டாபிராம், பூந்தமல்லி உள்ளிட்ட சில காவல் சரகங்கள் ஆவடி காவல் ஆணையரின் கட்டுப்பாட்டின் கீழ் செல்ல வாய்ப்பு உள்ளது என்று போலீஸார் கூறுகின்றனர்.
நில அபகரிப்பு, மோசடி, சைபர் க்ரைம் உள்ளிட்ட குற்றங்களை விசாரிக்கும் பிரத்யேக பிரிவு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ளது. இதேபோல, புதிதாக அமைய உள்ள காவல் ஆணையர் அலுவலகங்களிலும் தனித்தனியாக மத்திய குற்றப்பிரிவுகளை அமைக்கும் நடவடிக்கையும் தொடங்கப்பட்டுள்ளது.
கூடுதல் டிஜிபி அந்தஸ்தில் உள்ள ஐபிஎஸ் அதிகாரிகள்தான் சென்னை காவல் ஆணையராக நியமிக்கப்படுகின்றனர். அதேபோல, தாம்பரம் காவல் ஆணையராக கூடுதல் டிஜிபி அந்தஸ்தில் உள்ள அதிகாரியும், ஆவடி காவல் ஆணையராக ஐ.ஜி. அந்தஸ்தில் உள்ள அதிகாரியும் நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது சென்னை காவல் ஆணையராக உள்ள கூடுதல் டிஜிபி சங்கர் ஜிவால் விரைவில் டிஜிபியாக பதவி உயர்வு பெற உள்ளார். எனவே, அவர் பதவி உயர்வு பெற்று சென்னை காவல் ஆணையராக தொடரலாம். அல்லது, உளவுப் பிரிவு டிஜிபியாக பணியிடம் ஒதுக்கி நியமிக்கப்படலாம்.
மேலும், தற்போது உளவுப் பிரிவு கூடுதல் டிஜிபியாக உள்ள டேவிட்சன் தேவாசீர்வாதம் சென்னை காவல் ஆணையராக நியமிக்கப்படவும் வாய்ப்பு உள்ளது. புதிதாக அமையும் தாம்பரம் காவல் ஆணையர் பதவிக்கு நிர்வாகப் பிரிவு கூடுதல் டிஜிபியாக உள்ள எம்.ரவி நியமிக்கப்படக்கூடும் என்று கூறப்படுகிறது.
இப்பதவிகளை பிடிக்க உயர் அதிகாரிகள் மத்தியில் கடும் போட்டி காணப்படுகிறது. ஆவடி காவல் ஆணையர் பதவியை பிடிக்கவும் ஐ.ஜிக்கள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.