லக்னோவில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் நிதியமைச்சர் பங்கேற்காதது ஏமாற்றமளிக்கிறது: முதல்வருக்கு பாஜக தலைவர் அண்ணாமலை கடிதம்

லக்னோவில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் நிதியமைச்சர் பங்கேற்காதது ஏமாற்றமளிக்கிறது: முதல்வருக்கு பாஜக தலைவர் அண்ணாமலை கடிதம்
Updated on
1 min read

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நேற்று அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் லக்னோவில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், தமிழகம் சார்பில் பேசப்பட வேண்டிய பிரச்சினைகள் அதிகம் இருந்தும், தமிழக நிதியமைச்சர் பங்கேறகவில்லை. இது மக்களுக்கு ஏமாற்றம் அளித்துள்ளது.

கரோனாவால் 20 மாதங்களுக்குப் பின்பு நேரடியாக நடைபெற்ற இக்கூட்டத்தில், பல்வேறு தரப்பினருக்குமான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இதில், தமிழகத்தின் பிரச்சினைகளை எடுத்துரைக்க எவரும் இல்லை என்பது, மக்களை மதிக்காத எதேச்சதிகாரமாகும்.

வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டியிருந்ததால் இக்கூட்டத்துக்கு செல்லவில்லை என்று நிதியமைச்சர் கூறியிருக்கிறார். இதிலிருந்து, திமுக அரசு எதற்கு முக்கியத்துவம் தருகிறது என்று தெளிவாகிறது.

இக்கூட்டம் குறித்து செப்டம்பர் 2-ம் தேதியே அறிவிப்பு வெளியாகியும், போதிய அவகாசம் இல்லை என்கிறார் தமிழக நிதியமைச்சர். அதேபோல, லக்னோவுக்கு நேரடி விமானம் இல்லை என்றார். பின்னர் தந்த விளக்கத்தில், சிறிய ரக விமானங்களில் செல்ல மாட்டேன் என்கிறார்.

வெறும் மூன்று மணி நேரப் பயணத்தில் நேரடி விமானம் இருந்தும், தவறான தகவல்களை அவர் கூறியுள்ளார்.

பெட்ரோலியப் பொருட்களில் உள்ள வரிகளை ஒருங்கிணைத்து, ஜிஎஸ்டி பட்டியலில் இணைக்க வேண்டும் என்று எதிக்கட்சித் தலைவராக தாங்கள் கூறியது மக்களால் வரவேற்கப்பட்டது,

ஆனால், ஆட்சிக்கு வந்த பின்னர், தங்கள் நிலைப்பாடு தலைகீழாக மாறிவிட்டது. தவறைச் சுட்டிக்காட்ட வேண்டிய எதிர்க்கட்சி கடமை காரணமாக, இக்கடிதத்தை எழுதியுள்ளேன். இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in