திருவள்ளூர் மாவட்டத்தில் 6 நாட்களுக்கு மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி: பருவமழை முன்னெச்சரிக்கையாக அமைச்சர் தொடங்கி வைத்தார்

திருவள்ளூர் மாவட்டத்தில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணியை நேற்று ஆவடி மாநகராட்சி பகுதியில் பால்வளத் துறை அமைச்சர் நாசர் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணியை நேற்று ஆவடி மாநகராட்சி பகுதியில் பால்வளத் துறை அமைச்சர் நாசர் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Updated on
1 min read

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவள்ளூர் மாவட்டத்தில் மழைநீர் வடிகால்வாய்கள் தூர்வாரும் பணியை நேற்று பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் தொடங்கி வைத்தார்.

வடகிழக்கு பருவ மழையால் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் புகுவதை தடுத்து, நோய்கள் பரவுவதை தடுக்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவள்ளூர் மாவட்டத்தில் 6 நாட்களுக்கு மழைநீர் வடிகால்வாய்கள் தூர்வாரும் பணி நேற்று தொடங்கியது.

வரும் 25-ம் தேதிவரை நடைபெற உள்ள இப்பணியை ஆவடி மாநகராட்சியின் 17-வது வார்டான பருத்திப்பட்டு, வசந்தம் நகர் பகுதியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் தொடங்கி வைத்து, பொக்லைன் இயந்திரம் மூலம் தூர்வாரி தூய்மைப்படுத்தும் பணிகளை பார்வையிட்டார்.

அப்போது அமைச்சர் தெரிவித்ததாவது: ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட 48 வார்டுகளில் அமைந்துள்ள 14.48 கி.மீ. நீளம் கொண்ட 15 பிரதான மழைநீர் வடிகால்வாய்கள் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் தூர்வாரப்பட உள்ளன.

அதேபோல், ஆவடி மாநகராட்சியில் உள்ள 199 கி.மீ. நீளம் கொண்ட சிறிய வகை மழைநீர் வடிகால்வாய்களும் 120 தூய்மைப் பணியாளர்கள் மூலம் தூர்வாரப்பட உள்ளன.

மாவட்டம் முழுவதும் மழைநீர் வடிகால்வாய்களை தூர்வாரும் பணியை6 நாட்களுக்குள் முடிக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், ஆவடிமாநகராட்சி ஆணையர் சிவகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in