

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களை மட்டுமின்றி கேரளாவையும் இணைக்கக்கூடிய திருநெல்வேலி- தென்காசி ரயில் வழித்தடம் அம்பாசமுத்திரம், கடையம், பாவூர்சத்திரம் என, பொதிகை மலை அடிவாரம் வழியாகச் செல்கிறது. இந்த வழித்தடத்தில் திருநெல்வேலியில் இருந்து கல்லிடைக்குறிச்சி வரை 30.78 கி. மீ தூரம் 01.06.1902 அன்றும், கல்லிடைக்குறிச்சியில் இருந்து செங்கோட்டை வரை 50.34 கிமீ தூரம் 01.08.1903 அன்றும் மீட்டர் கேஜ் வழித்தடமாக தொடங்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து கொல்லம் - புனலூர், புனலூர் - செங்கோட்டை மீட்டர் கேஜ் வழித்தடங்கள் முறையே 01.06.1904, 26.11.1904 ஆகிய தேதிகளில் தொடங்கப்பட்டன.
மீட்டர் கேஜ் பாதையாக ரயில்கள் இயங்கிக் கொண்டிருந்த கொல்லம் - திருநெல்வேலி - திருசெந்தூர் மற்றும் தென்காசி – விருதுநகர் ஆகிய 357 கி.மீ தூரம் கொண்ட வழித்தடத்தை அகல ரயில் பாதையாக மாற்ற 1997-98 ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அப்போதைய திட்ட மதிப்பீடு ரூ. 712 கோடியாகும். இதையடுத்து 21.09.2012 ம் தேதி மீட்டர் கேஜில் இருந்து அகலப்பாதையாக மாற்றப்பட்டு பயணிகள் ரயில்கள் இயக்கம் தொடங்கியது.
தலைநகருக்கு ரயில் இல்லை
தொடக்கத்தில் 1904-ல் இருந்து 1927 வரை இந்த வழித்தடத்தில் கொல்லம் மெயில் இயங்கி வந்தது. கொல்லத்தில் இருந்து இரண்டு தினசரி ரயில்கள் சென்னைக்கு இயக்கப்பட்டன. செங்கோட்டையில் இருந்து மயிலாடுதுறை பயணிகள் ரயிலும் இயக்கப்பட்டன. மேலும் திருநெல்வேலி - செங்கோட்டை இடையே பயணிகள் ரயில்கள் நீராவி என்ஜினில் இயங்கி வந்துள்ளன. இந்த வழித்தடத்தில் பாவூர்சத்திரம், கீழக்கடையம், அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி ஆகிய ரயில் நிலையங்கள் கிராசிங் நிலையங்களாக விளங்குகின்றன.
அகலப்பாதையாக மாற்றப்பட்டு 9 ஆண்டுகள் கடந்த பின்னரும் இன்று வரை இந்த வழித்தடத்தில் தலைநகர் சென்னைக்கு ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நிலுவையில் உள்ளது. பாவூர்சத்திரம், கடையம், அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி சுற்று வட்டாரத்தை சேர்ந்தவர்கள் சென்னைக்கு ரயில்கள் இல்லாத காரணத்தால் தென்காசி ரயில் நிலையத்தையோ அல்லது திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தையோ நாட வேண்டிய நிலை உள்ளது.
இந்த வழித்தடத்தில் திருநெல்வேலியில் இருந்து அம்பை, தென்காசி வழியாக கோயம்புத்தூர், பெங்களூரு, மங்களூரு ஆகிய ஊர்களுக்கு ரயில்கள் இயக்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்த வழித்தடத்தில் பல ரயில்களையும் இயக்கி முழுமையாக பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்பது ரயில் பயணிகள் சங்கங்களின் கோரிக்கை.