

உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெறும் ஊராட்சிகள் தவிர்த்து தமிழ்நாட்டிலுள்ள கிராம ஊராட்சிகளில் அக்டோபர் 2, 2021 காந்தி ஜெயந்தி அன்று கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்துத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
''தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளில் கிராமசபைக் கூட்டங்கள் வருடத்திற்கு நான்கு முறை அதாவது ஜனவரி 26 (குடியரசு தினம்), மே 1 (தொழிலாளர் தினம்), ஆகஸ்ட் 15 (சுதந்திர தினம்) மற்றும் அக்டோபர் 2 (காந்தி ஜெயந்தி) ஆகிய நாட்களில் நடத்தப்பட வேண்டும். கடைசியாக கிராம சபைக் கூட்டங்கள் ஜனவரி 26, 2020 அன்று நடத்தப்பட்டன. அதன்பிறகு கடந்த 6 முறைகளாக கோவிட் - 19 பெருந்தொற்று காரணமாக கிராமசபைக் கூட்டங்கள் நடத்தப்படவில்லை.
தற்போது, அக்டோபர் 2, காந்தி ஜெயந்தி அன்று நடைபெற வேண்டிய கிராமசபைக் கூட்டங்களை நடத்திடத் தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும், ஊரக உள்ளாட்சித் தேர்தல்களின் காரணமாக தேர்தல் நன்னடத்தை விதிகள் நடைமுறையில் இருக்கும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களிலும் மற்றும் இதர மாவட்டங்களின் தேர்தல்கள் நடைபெற உள்ள ஊராட்சிகளையும் தவிர்த்து பிற ஊராட்சிகளில் கிராமசபைக் கூட்டங்கள் நடத்தப்படும்.
கிராமசபைக் கூட்டங்கள் ஊராட்சி நிர்வாகத்தின் ஆணிவேராகவும், மக்களதிகாரத்தின் அடித்தளமாகவும் அமைந்துள்ளது. கிராமசபைக் கூட்டங்கள் மூலமாக ஜனநாயக முறையில் ஊராட்சிகளில் பணிகளைத் தேர்வு செய்தல், ஊராட்சியின் நிதிநிலை அறிக்கையைச் சமர்ப்பித்தல், ஊராட்சிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைக் கலந்தாலோசித்து, தாங்களே தேர்வு செய்தல், நிதி தணிக்கை செய்தல் போன்ற மிக முக்கியப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கிராமசபைக் கூட்டங்களில் நடைபெறும் விவாதங்கள் ஆக்கபூர்வமாக அமைந்து அவ்வூராட்சியின் ஒட்டுமொத்த வளர்ச்சியை எட்டிடும் வகையில் அமைகின்றன. எனவே கோவிட் 19 தொற்று தவிர்ப்பு நெறிமுறைகளுடன் கிராமசபைக் கூட்டங்கள் நடத்த தமிழ்நாடு அரசு அனுமதித்துள்ளது.
கிராமசபைக் கூட்டங்கள் நடத்திடும்போது அரசு விதித்துள்ள கரோனா தடுப்பு நடவடிக்கைகளையும் வழிகாட்டு நெறிமுறைகளையும் முழுவதுமாக பின்பற்றிட மாவட்ட ஆட்சித் தலைவர்கள் கிராம ஊராட்சிகளை வழிநடத்திட வேண்டும். கிராமசபைக் கூட்டங்களில் பங்கேற்கும்போது, ஊரகவாழ் மக்கள் முகக்கவசம் அணிந்தும், தகுந்த தனிநபர் இடைவெளியைப் பின்பற்றியும் மற்றும் இதர வழிகாட்டு நெறிமுறைகளையும் சிறிதும் வழுவாமல் கடைப்பிடித்திட வேண்டும்''.
இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.