

மக்கள் விரோதச் சட்டங்களை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் தெரிவித்துள்ளார்.
வேளாண் சட்டங்கள், பெட்ரோல்- டீசல் விலை உயர்வு, பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயம் உள்ளிட்ட மத்திய அரசின் நடவடிக்கைகளைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் நாடு முழுவதும் இன்று நடத்திய போராட்டத்தின் ஒரு பகுதியாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் அதன் தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் தலைமையில், திருச்சி காஜா நகரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தின்போது செய்தியாளர்களிடம் காதர் மொகிதீன் கூறுகையில், ''டெல்லியில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டம் ஓராண்டை நெருங்கிக் கொண்டிருக்கிறது. அறவழியில் அவர்கள் நடத்தி வரும் போராட்டம் தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் விவசாயிகள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு, வேளாண் சட்டங்களைக் கைவிட்டு, விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க வேண்டும்.
இன்று வரை விவசாயிகள் போராட்டம் அமைதியாகவும், சட்டரீதியாகவும் நடைபெற்று வருகிறது. அது, வன்முறை போராட்டமாக மாறிவிடாமல் தடுப்பது மத்திய அரசின் தலையாய கடமையாகும். எனவே, மத்திய அரசு விவசாயிகள் போராட்டத்தை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். மக்கள் விரோதச் சட்டங்களைக் கைவிட வேண்டும்'' என்றார்.
ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாநில சொத்துப் பாதுகாப்புக் குழு உறுப்பினர் ஜி.எஸ்.ஏ.மன்னான், புதுச்சேரி மாநிலத் தலைவர் டி.இப்ராகிம் குட்டி உட்பட பலர் கலந்து கொண்டனர்.